Monday, November 10, 2008

பழைமையில் பூத்த புதுமை மலர்

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பதாகும். செங்கல்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மையார் எனும் பெற்றோர்க்கு ஆறாம் குழந்தையாக சுபானு ஆண்டு ஆவணித் திங்கள் 11-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (26.8.1883) பிறந்தவர் இவர்.
தாத்தா வேங்கடாசல முதலியார் காலத்திலேயே திருவாரூரிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது குடும்பம். தந்தையார் காலத்தில், துள்ளத்தில் பிறந்திருந்தும், முன்னோரின் பிறப்பிடமாகிய திருத்தலம் திருவாரூரை மறவாதிருக்கத் தம் பெயரோடு இணைத்துக் கொண்டு திருவாரூர் வி. கலியாணசுந்தரம் என்றே கையொப்பமிட்டு வந்தார். 1890-ல் துள்ளத்திலிருந்து, சென்னை ராயப்பேட்டைக்குக் குடும்பம் வந்து சேர்ந்தது. தம் இறுதிநாளான 17.9.1953 முடிய ராயப்பேட்டையிலேயே வாழ்ந்திருந்தார் திரு.வி.க.
தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப் பெரியார், சாது, சாது முதலியார் என்று பலவாறாகப் பலரால் அழைக்கப்பட்ட இவருக்கு நிகராகப் பல்துறைத் தொண்டாற்றியவர் வேறு எவரும் இலர் என்றே சொல்லலாம். மெலிந்த, நலிந்த உடல்வாகு கொண்ட இவர் எழுபது ஆண்டுகள் ஒழுக்கமுடன் வாழ்ந்து ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன.
ஆன்மிகத்தில் ஒருகாலும், இலக்கியத்தில் ஒருகாலும் அழுத்தமாக ஊன்றி, அரசியலுக்கு ஒரு கையும், தொழிலாளர் இயக்கத்திற்கு ஒரு கையும் படர்த்திப் பெண்ணின் பெருமை பேசுகின்ற வாயோடும், பொதுவுடைமையையும், பொதுச் சமய நன்னெறிகளையும் எதிர்நோக்கும் விழிகளையும் கொண்டு இயங்கியவர்.
1917-ல் அரசியலில் இவரது கன்னிப்பேச்சு கூட்டத்தாரைக் கவர்ந்தது. அன்னிபெசன்ட் அம்மையாரிடம் அரசியல் நிலையிலும், ஆன்மிக நிலையிலும் திரு.வி.க.வின் மனம் ஈடுபட்டது. திலகர் வழியில் தொடங்கிய இவரது அரசியல் பின்னாளில் காந்தியத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டது.
"தேசபக்தன்', "நவசக்தி' இதழ்களின் வாயிலாக இவர் எழுதிய - எழுப்பிய விடுதலை உணர்வை வேறு எவரும் செய்திருக்க இயலாது. எழுத்தாலும் பேச்சாலும் விடுதலைக் கனலை மக்கள் மனத்தில் கொழுந்துவிட்டு எரியச் செய்த விடுதலை வீரர் எனலாம். தமிழ்நாட்டுக் காங்கிரஸின் முப்பெரும் தலைவர்களாக அந்நாளில், வரதராசுலு நாயுடு, ஈ.வே. ராமசாமி நாயக்கர் மற்றும் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் ஆகியோர் திகழ்ந்தனர். மக்கள் இவர்களை, நாயுடு, நாயக்கர், முதலியார் என்றே அழைத்தனர்.
திரு.வி.க. தாம் வகித்து வந்த வெஸ்லிக் கல்லூரித் தமிழாசிரியர் வேலையை அரசியல் பணிகளுக்காகக் கைவிட்டவர். பல மாநாடுகளில் பங்கேற்றும் தலைமை தாங்கியும் எழுச்சியுரை ஆற்றினார். மார்க்சியத்தை மனமார ஏற்று அக் கருத்துகளையும் தேசிய மாநாடுகளில் பரப்பி வந்தார்.
1925-ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் திரு.வி.க. வீற்றிருக்க, பெரியார் ஈ.வே.ரா. கொண்டு வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை, மாநாட்டுச் சூழல் காரணமாக, தலைவர் ஆதரிக்க மறுத்ததால் ஈ.வே.ரா. காங்கிரஸிலிருந்து விலகவும் அவர் காரணம் ஆனார். பின்னாளில் தாமும் காங்கிரஸிலிருந்து வெளியேறினார் என்பது தனிக்கதை. ஆயினும் அரசியல் துறவு மேற்கொள்ளவில்லை.
ஆயிரம் விளக்குப் பகுதி பள்ளியிலும், வெஸ்லிக் கல்லூரியிலுமாக ஏழரையாண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பழைய இலக்கியங்களையும் புதுமை நோக்கில் இனிமை தவழ அவர் கற்பித்தமை தனித்தன்மை வாய்ந்தது. நான்கு முழக் கதர் வேட்டியும், கதர் முழுக்கைச் சட்டையும், தோளில் சுற்றிய ஒரு துண்டுடன் எளிமையுடையவராக வாழ்ந்தார். தமிழ்த் தென்றலாகத் தவழ்ந்து வரும் அவரது பேச்சு அனைவரையும் கவர்ந்து ஈர்த்தது.
பேச்சிலும் ஏற்றமுடையது அவரது எழுத்து. திரு.வி.க. எழுத்து நடை ஒரு தனி நடை. கரடு முரடான கடுநடையின்றி இனிய செந்தமிழில் உணர்ச்சி மிகுந்து காணப்படும் நடை அவருடையது. அவர் எழுத்துகளை அச்சிட நிரம்ப உணர்ச்சிக்குறிகளும் (!) வினாக்குறிகளும் (?) வேண்டும். எண்ணுக! கருதுக! எழிலின் திருக்கோலம் என்னே! வியப்பினும் வியப்பே! என்றவாறும், நோக்கம் என்ன? அளவுண்டோ? புகழவல்லேன்? என்ற ஆளுமைகளை நூல்கள் முற்றிலும் காணலாம்.
ஏறத்தாழ ஐம்பது நூல்கள் படைத்தளித்துள்ளார். அவை தமிழுக்குத் திரு.வி.க.வின் கொடை எனலாம். "முருகன் அல்லது அழகு', "பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை', "முடியா? காதலா? சீர்திருத்தமா?', "மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்', "சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து', "தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு', "பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும்', "உள்ளொளி', "இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்', "சைவத்தின் சமரசம்', "முருகன் அருள்வேட்டல்' முதலாய ஆறு வேட்டல் என மறக்க முடியாத நூல்கள் பற்பலவாம்.
தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கம் வலுப்பெற வ.உ.சி. அவர்களைப் போன்றே திரு.வி.க.வும் அரும்பணி ஆற்றியுள்ளார்.
தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்பிலிருந்த எவரும் செய்திராத வகையில், தொழிலாளர்க்கு மார்க்சிய, லெனினிய கொள்கை விளக்க வகுப்புகள் நடத்தியவர் திரு.வி.க. ஒரு பொழிவின்போது "தொழிலாளர்க்குப் புள்ளிவிவரக் குறிப்புகள் கூறலாமா?' என்று காவல் துறைத் தலைவர் கடிந்துரைத்தபோது, தொழிலாளரும் "மாந்தர் அல்லரோ?' என முகத்தில் அடித்தால் போல் விடை பகர்ந்தார்.
மார்க்சிய இலக்கை காந்திய வழியில் அடைவதே திரு.வி.க.வின் தனிப்பாதை. மார்க்சியமும் காந்தியமும் அவரின் இருகண்கள். மார்க்சியம் தந்தை என்றால் காந்தியம் தாய் என்றார் அவர்.
திரு.வி.க. சமயப்பற்றுமிக்கவர். சமயப்பற்றினும் சமயப்பொறைமிக்கவர். சமய நூல்களில் புலமையும், ஆழ்ந்தகன்ற அறிவும் தெளிவும் உடையவர். சைவ, வைணவ, சமண, பெüத்த, கிறித்துவ, இஸ்சுலாமிய நூல்களைக் குறைவின்றிக் கற்றவர். யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளையும், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) ஞானியாரடிகளும் பெரு ஞானத்தை ஊட்டியவர் ஆவர்.
புராண விரிவுரைகள் ஆற்றி வந்தவர், பட்டினத்தார் பாடல்களுக்கு உரை எழுதினார். பற்பல "பக்த சன சபை'க் கூட்டங்களில் பேசி வந்தார். தவத்திரு ஞானியாரடிகள் தலைமையில் சைவ சிந்தாந்த "மகா சமாச' விழாவில் அரியதோர் உரையாற்றினார். 1934-ல் சைவ சித்தாந்த மகா சமாச மாநாட்டில் தலைமையுரை ஆற்றினார்.
அவரவர் சமய நெறி கடைப்பிடித்து வாழ வேண்டும்; பிற சமய வெறுப்பு வேண்டா; உயிர்ப்பலியிடுதல் கூடாது; புலால் உண்ணக் கூடாது என்பவை அவர் வலியுறுத்திய சமய நெறிகள். பிற உயிர்க்குத் தீங்கு செய்யாமை, சாதி வேறுபாடு கருதாமை, அன்பே சிவம் என்றறிதல், எவரையும் தாழ்த்தாமல் மதித்து நடத்தல் எனும் சமரச நெறிகளை வற்புறுத்தியும் கடைப்பிடித்தும் வாழ்ந்தார்.
ஆணுக்குப் பெண் நிகரானவள் என்னும் கருத்திற்கும் மேலாக, ஆணினும் பெண் உயர்வுடையவள்; போற்றி வணங்கி வழிபடத் தக்கவள் என்னும் கருத்தை இடையறாது வலியுறுத்தியவர் திரு.வி.க. "பெண்ணின் பெருமை' எனும் நூல் திரு.வி.க.வின் பெண்ணியச் சிந்தனைகளுக்குச் சான்றாக விளங்குகிறது.
அன்பு மனைவியுடன் ஆறாண்டுகள் வாழ்ந்து, ஆண், பெண் இரு குழந்தைகளைப் பெற்று இரண்டையும் அற்ப ஆயுளில் இழந்து, பின்னர் மனைவியையும் என்புருக்கி நோய்க்குப் பலி கொடுத்து வாடிய திரு.வி.க. மறுமணம் செய்து கொள்ளவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பண்பாட்டில் உறுதியாக நின்றவர் அவர்.
அரசியலில் அனைத்துக் கட்சியினரிடத்தும் அன்பும், தொடர்பும் கொண்டிருந்தார். தேசியம், நயன்மை (நீதிக்கட்சி), திராவிடம், தமிழியம், பொதுவுடைமை என அனைத்துப் பிரிவினரும் மதித்துப் போற்றும் சான்றோராக வாழ்ந்தார். பதவிக்கும், புகழுக்கும், செல்வத்திற்கும் நசையுறாத மேன்மை கொண்டவர்.
வாடகை வீட்டிலே வாழ்ந்தவருக்குச் சொந்த வீடு அமைத்துக் கொடுக்கச் சிலர் முனைந்தபோதும் "வேண்டா' எனத் தடுத்த நேர்மையாளர். அவர்தம் குழந்தையாகப் பேணி வளர்த்த சாது அச்சுக்கூடம் இன்றில்லை. கண்ணொளி மங்கிய இறுதிக் காலத்திலும் சாது அச்சக நண்பரைக் கொண்டு, திரு.வி.க. சொல்ல அவர் எழுத என்று உருவாக்கம் ஆன நூல் "முதுமை உளறல்'. இப்படியும் ஒருவர் வாழ்ந்தாரா? என்று வியக்கச் செய்யும் வாழ்வு அவருடையது.
பழைமையில் பூத்த புதுமை மலர் திரு.வி.க!
நன்றி: தினமணி.

No comments: