முனைவர் ப.பத்மநாபன்.
""தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்'' என்றான் தேசியக்கவி பாரதி. பசியால் ஒரு தனிமனிதன் கூட வாடக்கூடாது என்பது அவனது கொள்கை. பசியைப் பிணியாக உருவகப் படுத்தியிருக்கிறான் தமிழ்ப்புலவன். எனவே உணவு, பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்தாகிறது. பசியைப் பற்றிக் கூறவரும் மணிமேகலை.
"" குடிபிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்வி பெரும்புனை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னுமோர் பாவி''
என்று கூறுகிறது. பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும் குமரகுருபரர்
"" மானம் குலம்கல்வி வண்மை அறிவுடமை
தானம் தவமுயற்சி தாளாண்மை- தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்''
என பத்து குணங்களைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
எனவே பசி ஒருவனுடைய அனைத்து நல்ல குணங்களையும் இழக்கச் செய்துவிடும். எனவேதான் மணிமேகலை "" ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை'' என்றும் "" மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே'' என்றும் கூறுகிறது.
சங்ககாலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. ஒருபுலவனின் இல்லத்தில் வறுமை தாண்டவமாடுகிறது. புலவனைப் பெற்ற தாய் "" பசியால் வாடுகிறேனே, என்னுயிர் இன்னும் போகவில்லையே'' என்று நோகிறாள். புலவனுக்கு நிறைய பிள்ளைகள். மனைவியின் மெலிந்த உடல், உணவின்றி வாடும் ஒட்டிப்போன வயிறு. தாய்ப்பாலுக்கு ஏங்கும் கைக்குழந்தை. அடுப்பில் பூனை தூங்குகிறது. குழந்தைகளுக்கு ஏதோதோ கதைகளைக் கூறி அவைகளின் கவனத்தைத் திருப்ப முனைகிறாள் தாய். ஆனால் குழந்தைகள் பசியால் வாடி வதங்குகின்றன. உணவு கேட்டு அடம்பிடிக்கின்றன.
இப்பிள்ளைகளின் பசியைத் தீர்க்க வேறு வழியில்லாத சூழலில் குப்பைக் கீரையைப் பறித்து உப்புக்குக் கூட வழியில்லாமல் உப்பில்லாமல் குப்பைக் கீரையைச் சமைத்துத் தருகிறாள். இக்காட்சிகளைக் காணும் குடும்பத்தலைவனான புலவனின் உள்ளம் வருந்துகிறது. தனது நல்குரவைப் போக்குபவர் யார் எனச் சிந்திக்கிறான். விடையும் காண்கிறான். அந்தப் பசிப்பிணி மருத்துவனை நோக்கிப் புறப்படுகிறான்.
"" குமண வள்ளலே, பாரி முதலாகிய ஏழுவள்ளல்கள் மறைந்த பின்னர் எல்லோர்க்கும் கொடுக்கின்ற வள்ளல் நீ என எல்லோரும் உன்னை நாடி வருகின்றனர். யானும் பசிப்பிணிக் கொடுமையால் வறுமை துரத்த உன்னை நாடி வந்துள்ளேன். உன் வள்ளண்மை வாழ்க'' என்று வாழ்த்துகிறான். வறுமையையும் எடுத்துக் கூறுகிறான்.
புலவனின் வறுமையைக் கேட்ட புரவலனின் நெஞ்சம் பதறுகிறது. "" ஐயோ! என்ன கொடுமை இது? இவ்வளவு வறுமை உங்களை வாட்டி இருக்கிறதே, நீங்கள் முன்பே என்னிடம் கூறியிருக்கலாமே'' என வருந்திக் குமண வள்ளல் நிறைய செல்வத்தையும் பொருளையும் வண்டிகளில் புலவனுக்குக் கொடுத்தனுப்புகிறான். புலவன் பெருஞ்செல்வத்தோடு வீடு வந்து சேர்கிறான்.
அதன்பின் நடக்கின்ற நிகழ்ச்சியில்தான் ஒரு தமிழ்ப்புலவனின் தமிழ்ப்பண்பைக் காண்கிறோம். பொருட்குவியலோடு வந்த புலவன் தன்மனைவியை அழைத்துப் பின்வருமாறு கூறுகிறான். ""என் இனிய மனையாளே! குமண வள்ளல் கொடுத்த இந்தச் செல்வத்தை உன்னை விரும்பி வருபவர்க்கும், நீ யாரை விரும்புகிறாயோ அவர்களுக்கும், உன்னுடைய சுற்றத்தார் யாவர்க்கும், வறுமையால் வாடி உன்னை நாடி வரும் அனைவருக்கும் யார் எவர் எனப் பார்க்காது என்னையும் கேட்காமல் உன் விருப்பம் போல் எல்லோருக்கும் கொடுத்துதவுவாய். நமக்கென்று எதையும் ஒதுக்காதே'' என்று கூறுகிறான். கணவனின் குறிப்பறிந்த மனைவி எல்லோர்க்கும் அச்செல்வத்தை வாரி வரையாது வழங்குகிறாள்.
அவன் மனைவியைப் பார்த்துப் பாடிய பாடல்:
நின்நயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்
பன்மான் கற்பின் நின்கிளை முதலோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க் கென்னாது என்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே
(புறம்- 163)
பெருஞ்சித்திரனார் குமணனிடம் பெற்று வந்த செல்வத்தைத் தானும் தன்குடும்பத்தார் மட்டுமே பயன்துய்க்க வேண்டும் என்று எண்ணவில்லை. அச்செல்வத்தை இல்லை என வந்தோர் அனைவருக்கும் கொடுக்கச் சொன்னது மட்டுமில்லாது அவ்வாறு கொடுக்க மனைவி தன்னுடைய அனுமதியையும் பெற வேண்டியதில்லை என்று கூறுகிறார்.
உலகில் பல இடங்களில் வறுமையும் பஞ்சமும் பசியும் தலைவிரித்தாடுகின்றன. தனக்கு மிஞ்சித்தான் தருமம் என்கின்றனர் சிலர். வள்ளுவன் ""ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு'' என்றும் ""ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்திழக்கும் வண்கண வர்''என்றும் கூறுகிறார்.
குமணன் முதலான வள்ளல் பெருமக்கள் பசிப் பிணியை நீக்க உணவென்னும் மருந்தை வரையாது வாரி வழங்கியவர். ஆனால் அவ்வாறு வழங்காது அவ்வுணவென்னும் மருந்தைத் தம்கண் வைத்திருந்து தாமே தேவைக்குமேல் அனுபவிக்க எண்ணுபவரைத்தாம் ""வண்கணவர்'' என வள்ளுவர் சாடுகிறார்.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அருளாளர் வள்ளலார் கூட பசிப்பிணியைப் போக்குவதையே தலைமை அறமாக வற்புறுத்துகிறார்.
அளவுக்கு மீறிச் சேர்த்து வைக்கப்படும் மருந்துகூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் கெட்டுப்போகும். எனவே பசி, பிணியாக மாறினால் உணவு மருந்தாக வேண்டும். அந்தப்பசியை நீக்கும் உணவாகிய மருந்தைத் தருபவன் பசிப்பிணி மருத்துவன் ஆகிறான். சங்ககால வள்ளல் பெருமக்கள் அனைவரும் பசிப்பிணி மருத்துவர்களாக விளங்கினர்.
இன்றும் பசி என்று வருவோர்க்கு இல்லையெனாது மனமுவந்து உணவு வழங்கும் அனைவரும் பசிப்பிணி மருத்துவரே. இந்த வகையில் உலகநாடுகள் ஒன்றுக்கொன்று உதவவேண்டும். வளத்தாலும் நலத்தாலும் வளர்ந்த நாடுகள் வறுமையுடன் போராடும் நாடுகளுக்கு உதவவேண்டும்.
ஓளவையார் ""கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை'' என்றார். கொடிய வறுமையைச் சந்தித்த புலவர் பெருஞ்சித்திரனார் புரவலராகவே உயர்ந்து நின்றார். இதுதான் அன்றைய தமிழ்புலவனின் பேருள்ளம்.
நன்றி: தினமணி.
No comments:
Post a Comment