Wednesday, October 29, 2008

சிறிலங்கா அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வது எதனால்...?:தினமணி நாளேடு கேள்வி!

இந்திய அரசுக்கும் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கும் சிறிலங்கா அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வது எதனால் என்பது புரியவில்லை என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் அந்த நாளேட்டில் வெளிவந்துள்ள ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜெயவர்த்தன காலத்திலிருந்து கூறப்படும் மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தருவோம், அப்பாவிப் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கு தடையின்றி நிவாரண உதவிகள் வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் போன்றவற்றைக் கேட்டுக் கேட்டு நமக்கெல்லாம் சலித்துவிட்டாலும், இந்திய அரசுக்கும், நமது முதல்வருக்கும் சிறிலங்கா அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வது எதனால் என்பது புரியவில்லை.
மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற தனது நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தனக்குத் திருப்தி அளிப்பதாகவும் முதல்வர் கூறி இருப்பது விசித்திரமாக இருக்கிறது. மத்திய அரசு அப்படி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று தெரியவில்லை. பசில் ராஜபக்சவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பலமுறை தந்த உதட்டளவு உத்தரவாதத்தை மறுபடியும் பெற்றிருப்பது முதல்வரைத் திருப்திப்படுத்தி இருப்பது ஆச்சரியம்தான்.
அல்லற்படும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பும், பாதிக்கப்பட்டால் நிவாரணமும் தர வேண்டிய கடமை சிறிலங்கா அரசுக்கு உண்டு. அதை அவர்கள் செய்யத் தவறி இருப்பதிலிருந்தே, எந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம். அவதிப்படும் இலங்கை குடிமக்களான தமிழர்களுக்குத் தங்களது செலவில் நிவாரணம் கூடத் தரத் தயாராக இல்லாமல் அதை இந்தியாவிலிருந்து கேட்டுப் பெறுகிறது அந்த அரசு என்றால், நாம் ஏமாளிகளாக இருக்கிறோம் என்றுதானே பொருள்?
தன்மான உணர்வு, சுயமரியாதை என்று ஊருக்கு உபந்நியாசம் செய்யும் முதல்வர், தன்மானமும், சுயமரியாதையும் இல்லாமல் தனது நாட்டுக் குடிமக்களுக்கு அன்னிய நாட்டின் நிவாரணம் கேட்கும் சிறிலங்கா அரசுக்குக் கண்டனம் தெரிவிக்காமல் இங்கே நிவாரண நிதி திரட்ட முற்பட்டிருக்கிறார். முன்பு, பழ. நெடுமாறன் திரட்டி வைத்திருந்த மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வீணடித்தபோது இல்லாத உத்வேகம், இப்போது திடீரென்று முதல்வருக்கு வந்திருக்கிறதே, அது ஏன்? புரியவில்லை!
விடுதலைப் புலிகள் அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கவசங்களாகப் பயன்படுத்துவதால் அவர்கள், சிலவேளைகளில் பாதிப்புக்கு உள்ளாக நேர்கிறது என்பது சிறிலங்கா அரசின் வாதம். நடத்துவது என்னவோ விமானக் குண்டு வீச்சு. அதில் எங்கிருந்து வருகிறது மனிதக் கவசம் என்று கேள்வி கேட்கக்கூடவா முதல்வருக்கும், மத்திய அரசுக்கும் தெரியாமல் போய்விட்டது?
கிளிநொச்சியில் இருக்கும் ஒரே மருத்துவமனையும் குண்டு வீச்சுக்கு இரையாகி விட்ட நிலையில் மருத்துவ வசதி இல்லாமல் அங்கே அப்பாவிகள் செத்து மடிகிறார்கள். போர்நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு தான் பேச்சுவார்த்தை என்றல்லவா முதல்வர் இந்திய அரசை வற்புறுத்தி இருக்க வேண்டும்.
இலங்கைப் பிரச்சினையில் அரசியல் தீர்வு என்று பேசுபவர்கள், முதலில் அதிகாரிகள் மூலம் இந்தப் பிரச்சினையை அணுகுவதை நிறுத்த வேண்டும். இலங்கைப் பிரச்சினையைப் பற்றி நன்றாகத் தெரிந்த தமிழக அரசியல்வாதி ஒருவரை உள்ளடக்கிய இந்தியக் குழுவால் மட்டும்தான் இலங்கையின் சமாதானத்துக்கு வழிகோல முடியுமே தவிர, அதிகாரிகளால் முடியாது என்று எடுத்துச் சொல்ல முதல்வர் ஏன் தயங்குகிறார்?
மத்திய அரசை வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதியும், சிறிலங்கா அரசின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று மத்திய அரசும் நிலைப்பாடு எடுத்திருக்கும்போது, அங்கே அன்றாடம் செத்து மடியும் அப்பாவித் தமிழர்களுக்கு எப்படி நிவாரணமும் நியாயமும் கிடைக்கும்? நாம் அனுப்பும் நிதியும், நிவாரணமும் சிறிலங்கா அரசால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
நாற்பதாண்டுப் பிரச்சினையை நான்கு நாட்களில் தீர்க்க முடியாது என்கிற முதல்வரின் கருத்து சிரிப்பை வரவழைக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலின் போதும், மனிதச் சங்கிலி நடத்தியபோதும் தெரியாத இந்த உண்மை, மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் வந்தவுடன்தான் முதல்வருக்குத் தெரிந்ததா என்ன? அது போகட்டும். கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக இந்தப் பிரச்சினைக்கு ஏன் தீர்வு காண முயற்சிக்கவில்லை?
பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் கொழும்பில் பாகிஸ்தான் தூதுவராக அமர்ந்து ராஜபக்ச அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும் நிலையில், சீனாவுடன் மிக நெருக்கமான உறவை சிறிலங்கா அரசு வளர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய அரசு உதட்டளவு உத்தரவாதத்தை நம்புவது சரியான இராஜதந்திரம் ஆகாது!

Tuesday, October 21, 2008

"த‌மிழின‌த்தின் அக்கினிப் புய‌ல்" இய‌க்குன‌ர் சீமான் அவ‌ர்க‌ள் ஆற்றிய‌ வீராவேச‌ உரை!

இராமேசுவ‌ர‌த்தில் த‌மிழ்த் திரை உலகின‌ர் 19/10/2008 அன்று ந‌ட‌த்திய‌க் கூட்ட‌த்தில் "த‌மிழின‌த்தின் அக்கினிப் புய‌ல்" இய‌க்குன‌ர் சீமான் அவ‌ர்க‌ள் ஆற்றிய‌ வீராவேச‌ உரை.

Monday, October 20, 2008

இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. என்ன செய்தது?

இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. என்ன செய்தது என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரிய கண்டுபிடிப்பு
1956-ம் ஆண்டிலேயே இலங்கை தமிழர்கள் உரிமை, மொழி, கலாசாரம் இவற்றைப் பாதுகாத்திடவும்- சிங்கள மொழியினர் ஆதிக்கம் அகன்றிடவும் அங்குள்ள தமிழர் கிளர்ந்தெழுந்தனர் என்பதைக் குறிப்பிடவும்; இன்று நேற்றல்ல- இலங்கை தமிழர் பிரச்சினை 1956 முதற்கொண்டு உருவானதாகும் என்று நான் சுட்டிக்காட்டியதற்கு ஆதாரமாக 1956-ல் சிதம்பரம் தி.மு.க. பொது குழுவிலேயே நான் முன்மொழிந்து- பொன்னம்பலனார் வழி மொழிந்த தீர்மானத்தை சான்றாக கூறியிருந்தேன்.
அதைப் படித்து விட்டு சிலர் 1956-ம் ஆண்டிலிருந்து- இருந்து வருகிற இலங்கை பிரச்சினையைத் தீர்க்க முடியாத கருணாநிதி; இப்போது தீர்க்கப் போவதாகச் சொல்வது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டை மறைப்பதற்காகத் தான் என்று அரிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளார்கள்.
அலட்சியப்படுத்திவிட்டு
இந்தியாவில்; தமிழ் மாநிலத்தில் மட்டும் மின்சாரப் பற்றாக்குறை இருப்பதாகவும்- மற்ற மாநிலங்களில் மின்சாரத் தடையே கிடையாதென்றும் பொய் கூறி- அரசியலுக்காகப் பேசுவோரின் அறியாமை கண்டு, அப்படிப் பேசுவோரை அலட்சியப்படுத்தி விட்டு; நாம் நமது ரத்தத்துடன் ஊறிய தமிழ் உணர்வு கொண்ட ஈழத் தமிழர்களின் இன்னல் துடைக்கும் பணியினைத் தொடருவோம்.
இலங்கை பிரச்சினை- அங்கே தமிழ் மொழியையும்- தமிழரையும் தாழ்த்தும் பிரச்சினை- அதனை எதிர்த்து முழங்கிய பிரச்சினை- இவையனைத்தும் 1956-ல் என்று தான் நாம் நினைத்திருக்கிறோம்; ஆனால்; இன்னும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டது அந்த பிரச்சினை என்பதற்கு; இரண்டு நாளைக்கு முன்பு; திராவிடர் கழகத் தலைவரும், தமிழர் தலைவருமான வீரமணி என்னிடம் அளித்த பழைய "விடுதலை'' ஏடு சான்றாகத் திகழ்கிறது.
1939-ல் நிறைவேற்றிய தீர்மானம்
1939-ல் இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் வாழும் தமிழர் பற்றி பண்டித நேரு குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தேன் அல்லவா? அதே ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாகக் குழுவில் (10-8-1939) ஈரோடு நகரில் தந்தை பெரியாரும்- அவர் தலைமையில் குமாரராஜா முத்தையா, ஏ.டி.பன்னீர்செல்வம், டபிள்ï.பி.ஏ.சவுந்திரபாண்டியன், சி.என்.அண்ணாதுரை (அண்ணா), என்.ஆர்.சாமியப்ப முதலியார், கி.ஆ.பெ.விஸ்வநாதம், டி.ஏ.வி.நாதன், சென்னை, பி.பாலசுப்பிரமணியம், சென்னை, எஸ்.நடேச முதலியார், ஏ.கே.தங்கவேலு முதலியார், காஞ்சி, பட்டுக்கோட்டை அழகிரி, என்.வி.நடராசன், சென்னை, என்.ஜீவரத்தினம் சென்னை, டி.சண்முகம் பிள்ளை திருவொற்றிïர், சி.டி.நாயகம், சென்னை, எம்.ஆர்.திருமலைசாமி, திருச்சி, டி.பி.வேதாசலம், டாக்டர் தர்மாம்பாள் சென்னை, வி.வி.ராமசாமி, விருதுநகர் ஆகியோர் கலந்து கொண்டு நிறைவேற்றிய முதல் தீர்மானம்-
"இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை சர்க்கார் கொடுமையாய் நடத்துவதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்து வருவதையும் இந்த குழு வன்மையாய்க் கண்டிக்கிறது.''
நீதி கட்சியினர்
ஆம்; 1939-ம் ஆண்டு பெரியார், அண்ணா, அழகிரிசாமி, கி.ஆ.பெ., பன்னீர்செல்வம் போன்ற பெரிய தலைவர்களால் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானமே- 17 ஆண்டு காலத்திற்குப் பிறகும் செயல் முறைக்கு வர முடியாமல்- இலங்கை தமிழர்களின் இன்னல்களைக் களைய முடியாமல் போனதென்றால்- அது பற்றி 1956லும் ஒரு தீர்மானம் தி.மு.க. பொது குழுவில் நிறைவேற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டதென்றால்- மொத்தத்தில் தமிழர் தலைவர்கள் அனைவரும் நடத்திய போராட்டத்திற்கு- சிந்திய ரத்தம்- கொடுத்த உயிர்- பறி போன உடைமை- இவையெதுவும் போதவில்லை என்பது தானே பொருள்?
அதனால் தானே இப்போது மிச்சமிருக்கிற தமிழ் இனத்தின் பிஞ்சுகள், அரும்புகள் உள்ளிட்ட மாந்தரையாவது மீட்பதற்கு வழி காண- நம்மிடையே ஏற்பட்ட துன்ப துயரங்களையும்- அதிர்ச்சிகளையும் தாங்கிக் கொண்டு; ஓரணியில் திரண்டு இந்திய அரசிடம் கேட்கும் உதவியையாவது ஒற்றுமையுடன் கேட்போம் என்று அனைத்து கட்சி தலைவர்கள் சார்பில் அன்பான வேண்டுகோள் வைத்தோம். தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை 17 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியவில்லையே என்று ஏங்கி; தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதி கட்சியினர்) அந்த தீர்மானத்தை திரிசங்கு சொர்க்கத்தில் ஊசலாட விட்டு விடவில்லை. எனவே; அந்த தீர்மானத்தின் தொடர்ச்சியாக 1956-ல் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை செயல்படுத்த முனைவதே, நாம், தமிழ்ப்பால் அருந்தியவர்கள் என்பதை தரணிக்கு உணர்த்தும் செயலாக இருக்க முடியும்.
பண்டாரக வன்னியன் வரலாறு
இலங்கையின் வரலாறு நமது தஞ்சை ராசராசன் எனும் பெருவேந்தன் காலத்துக்கு முன்பிருந்தே நமக்குப் பால பாடம்- இன்னும் அந்த வரலாற்றின் சில எழுச்சி மிகு பக்கங்களைப் போல அமைந்த கண்டி மன்னன் விக்கிரம ராஜ சிங்கன் அங்கே கி.பி. 1815 வரையில் ஆட்சி புரிந்த வரலாறும்- அதே ஆண்டில் கண்ணுசாமி என்ற அந்த தமிழ் மன்னனின் வீழ்ச்சியும்- தோற்றுப் போய் சிறைப்பட்ட கண்ணுசாமி (ஆம்; கண்டி, விக்கிரம ராஜ சிங்கன்) தமிழ்நாட்டில் வேலூரில் சிறை வைக்கப்பட்டதும் நானறிந்த வரலாறு என்பதால்; பதினாறு ஆண்டுகள் குடும்பத்துடன் சிறையிலிருந்து, சிறையிலேயே வேலூரில் மாண்டு விட்ட அந்த மன்னன் பெயரையும், வரலாற்றையும் மறந்து விடாமல் நினைவூட்ட; நான் முதல்-அமைச்சராக இருந்த 1-7-1990 அன்று வேலூரில் கண்டி தமிழ் மன்னன் பெயரால் முத்து மண்டபம் அமைத்து திறப்பு விழாவும் நடத்தினேன்.
இதெல்லாம் வரலாற்றுத் துளிகள்- வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ என்று பேசுபவர்களுக்கு வக்கணையாகத் தான் தோன்றும்- இலங்கை தீவில் அரசோச்சிய தமிழ் அரசர்களில் பண்டாரக வன்னியனின் வரலாற்றை நூலாக எழுதியவன் நான் என்ற முறையில்- இலங்கை வரலாற்றில் தந்தை செல்வநாயகம் வரையில் என் நெஞ்சில் நிற்பவர்கள்- அந்த தமிழ் உணர்வு தரிசாகப் போய் விடாத காரணத்தினால் தான் இன்றும் அந்த தமிழர்கள் இலங்கையில் படும் துன்பங்களை எண்ணித் துடித்துப்போகிறேன்.
தி.மு.க. செய்தது என்ன
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. என்ன செய்தது என்று தொடர்ந்து சிலர் தொடர்ந்து கேள்வி கேட்டு வருபவர்களுக்கு சுருக்கமாக அந்த பட்டியலைத் தருகின்றேன்.
1981-ம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்த அன்றைய தினமே, ஆகஸ்டு 13-ந் தேதியன்று நான் அன்றைய இந்திய பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் "கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும், தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று கூறுகின்றன. அங்குள்ள அரசாங்கமே கலவரத்தை ஊக்குவிப்பதாகத் தோன்றுகின்றது. வட கொழும்பில் தமிழர்களின் இல்லங்கள் தாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் ரெயில்கள் தாக்கப்பட்டுள்ளன. அதில் இருந்த தமிழ் பயணிகள் கொள்ளை அடிக்கப்பட்டு வண்டியை விட்டு வழியில் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள்.
அம்பாரை கோவில் தேர் நொறுக்கப்பட்டிருக்கிறது. இந்திய வம்சாவழித் தமிழர்களும் இலங்கை முழுதும் பல இடங்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள். நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டது. கொழும்பில் வயதான தமிழ் மூதாட்டி ஒருவர் பட்டப்பகலிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழர்களுக்கு நிவாரணமளிக்க முன் வரும் அமைப்புகள் இயங்க அரசாங்கம் அனுமதி தர மறுக்கிறது. கலவரங்களை அடக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. செய்திகள் உங்களுக்கு நேரடியாகக் கிடைக்கும் ஆதலால் இந்த பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் தாங்கள் தங்கள் கவனத்தை செலுத்தி உதவிட வேண்டுகிறேன்'' என்று கேட்டுக்கொண்டேன்.
கைது செய்யப்பட்டேன்
அந்த தந்தியைத் தொடர்ந்து 18-8-1981 அன்று மீண்டும் ஒரு தந்தியை இலங்கை தமிழர்களின் துயரம் குறித்து பிரதமருக்கு அனுப்பினேன். இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து, சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்து கொள்ள தமிழக அரசின் தடை உத்தரவை மீறி- பல்லாயிரக்கணக்கானவர்கள் 29-8-1981 அன்று குழுமினர். ஆனால் மாவட்ட செயலாளர் சீத்தாபதி, சட்ட மன்ற உறுப்பினர்கள் து.புருஷோத்தமன், என்.வி.என்.சோமு உள்பட 250 பேரை மட்டுமே காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யாவிட்டால் நானே போராட்டத்திற்கு தலைமை தாங்குவேன் என்று அறிவித்தேன். அ.தி.மு.க. அரசு என்னையும் கைது செய்தது.
ஆம், இலங்கை தமிழர்களுக்கான பிரச்சினையில் நான் கைது செய்யப்பட்டேன். நான் இலங்கை தமிழர்களுக்காக கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் எங்கும் கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்புகள்- போராட்டங்கள் நடைபெற்றன. எனது வேண்டுகோளையும் மீறி பலர் நா விடுதலை செய்யப்பட வேண்டுமென்று கோரி குறிப்பாக கோவிலடி பிருந்தாவன், திருச்சி மனோகரன், திருவாரூர் கிட்டு, பெருந்துறை முத்துப்பாண்டியன், கல்லாவி ராஜேந்திரன், மேல்மாயில் ஜெகன்னாதன், சென்னை மேரி போன்றவர்கள் தீக்குளித்தனர்.
கொன்று குவித்தனர்
அதன் பின்னர் 1983-ம் ஆண்டு தான் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர்'' என்கிற ஏடு 1983-ல் எழுதியது வருமாறு:-
"சிங்கள ராணுவத்தினர் 30 பேர் மன்னார் பகுதியில் உள்ள மக்களைக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். இவர்களது கொடூரத் தாக்குதல் ஆறு மணி நேரம் தொடர்ந்தது. மன்னார் நகரின் மத்திய மருத்துவமனையை ராணுவத்தினர் வெறி பிடித்துத் தாக்கினர். சாலைகளில் சென்ற வாகனங்களை நிறுத்தி அதில் உள்ளே இருந்தோரை வெளியே இழுத்துப் போட்டு அந்த இடத்திலேயே ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றார்கள். அருகில் இருந்த அஞ்சலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 15 பேரை வரிசையாக நிற்க வைத்து அவர்களை நிர்த்தாட்சண்யமாக சுட்டுப் படுகொலை புரிந்தார்கள். வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உழவர்களையும் சிங்கள ராணுவம் விடவில்லை. அவர்களையும் சுட்டுத் தீர்த்தது. இந்த திடீர் தாக்குதலின் முடிவில் 150 பேர் செத்துக் கிடந்தார்கள். 20 தமிழ் இளைஞர்கள் காணாமல் போனார்கள். இவர்கள் அருகில் இருந்த ராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள்''.
சிறைக்காவலர் முன்னிலையில்
25-7-1983 அன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிங்களவர் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றவர்களை- கத்திகள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், விறகுக் கட்டைகளால் தாக்கினர். அனைத்துக் கொடுமைகளும் சிறைக் காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றது. அந்த ஒரு நாளில் மட்டும் 35 தமிழர்கள் படுகொலைக்கு ஆளானார்கள். செய்தி கிடைத்தவுடன் தி.மு.க. கேளாக் காதுடையதாகவா இருந்தது? கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மறுநாளே சென்னையில் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெறும் என்று அறிவித்தேன். 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேர் அந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
27-7-1983 அன்று மீண்டும் 18 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து நான்கு நாட்கள் இலங்கையிலே நடைபெற்ற வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலைக்கு ஆளானார்கள் என்று செய்தி கிடைத்தது. சென்னையிலே குடியிருந்த குட்டிமணி, ஜெகன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
31-7-1983 அன்று முகவை மாவட்ட கழக மாநாடு என அறிவிக்கப்பட்டதை- இலங்கை தமிழர் பாதுகாப்பு மாநாடாக மாற்றப்பட்டு ராமநாதபுரம் நகரிலே நடத்தப்பட்டது. தமிழக அரசு 2-8-1983 அன்று முழு அடைப்பு என்று அறிவித்து தமிழகம் முழுவதிலும் வெற்றிகரமாக நடத்தியது.
எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா
4-8-1983 அன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டமும், 5-8-1983 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டமும் நடத்துவதென்று முகவை மாவட்ட மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. மத்திய அரசு தானாகவே முன் வந்து 5-8-83 அன்று தமிழகத்திலே ரெயில்கள் ஓடாது என அறிவித்தது.
7-8-1983 அன்று தி.மு.க. செயற்குழு கூடி, ஐ.நா. மன்றத்திற்கு இலங்கை தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று கோரி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா. சபைக்கு அனுப்ப முடிவு செய்து, அவ்வாறே வழக்கறிஞர் டி.பி.ராதாகிருஷ்ணன் மூலமாக அனுப்பியும் வைக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி, 10-8-1983 அன்று நானும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும் எங்களுடைய சட்ட மன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோம்.
பாதுகாப்பு மாநாடு
1983-ம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் நான்கு நாட்கள் தமிழகம் முழுதும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கூட்டங்களை நடத்தினோம். எதிர்க்கட்சியிலே தான் அப்போது இருந்தோமென்றாலும், 25-8-1983 அன்று பிரதமரின் தூதுவராக ஜி.பார்த்தசாரதி என்னை சென்னையிலே சந்தித்து பேசி விட்டுத் தான் பிறகு இலங்கை சென்றார். அவர் என்னைச் சந்தித்த போது இலங்கை தமிழர் பிரச்சினையில் பிரதமர் இந்திரா காந்தி விடுதலைப் போராளிகளிடம் கொண்டுள்ள பரிவையும், அந்த அடிப்படையில் அவர் வழங்கிடும் உதவிகளையும் என்னிடம் விளக்கினார்.
மூன்றாண்டு கால அமைதிக்குப் பின் 1986-ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் திங்களில் இலங்கையில் சிங்கள ராணுவத்தின் கொடுமைகள் அதிகரித்தன. அம்பாறை மாவட்டத்தில் தங்கவேலாயுதபுரம் என்ற கிராமத்தில் ஒரு நாள் இலங்கை ராணுவத்தினர் நுழைந்து கண்ணில் பட்ட பெண்களையும், வயதானவர்களையும், குழந்தைகளையும் குருவிகளைச் சுடுவது போலச் சுட்டுக் கொன்றார்கள். ஒரே நாளில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் மாண்டனர். தொடர்ந்து இப்படிப்பட்ட செய்திகள் தமிழகத்திற்கு வந்து கொண்டேயிருந்ததால், 26.3.1986 அன்று சென்னையில் `டெசோ'வின் அமைப்புக் கூட்டம் என் தலைமையிலே கூடி, மே திங்கள் 4-ம் நாள் மதுரை மாநகரில் நான் ஏற்கனவே குறிப்பிட்ட `டெசோ' சார்பில் அனைத்திந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களை எல்லாம் அழைத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.
கறுப்புச் சின்னம் அணிந்து
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் இந்தியாவிலே உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் அக்கறை கொண்டிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டி மத்திய அரசு தனது மெத்தனத்திலிருந்து விடுபட்டுத் தக்க தீர்வு காண முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
1986-ம் ஆண்டு மே திங்கள் இறுதியில் பசும்பொன், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு, இலங்கையிலே சிங்கள ராணுவத்தின் அடக்குமுறை அதிகமாகி அன்றாடம் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி வந்து, சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டுச் சென்னை திரும்பினேன். சென்னை வந்ததும், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனும், சிவசிதம்பரம், யோகேஸ்வரன், சம்பந்தம், தங்கத்துரை ஆகியோரும் என்னைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளை விளக்கினார்கள். இலங்கையில் நடைபெறும் கொடுமைகளைத் தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்த 31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த வேண்டுமென்றும், அனைவரும் கறுப்புச் சின்னம் அணிந்து ஆங்காங்கு கண்டன ஊர்வலங்களும், பொது கூட்டங்களும் நடத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தேன். அந்த ஆண்டும் என்னுடைய பிறந்த நாள் விழாவை நடத்த வேண்டாமென்றும், பிறந்த நாளுக்காக எனக்கு மாலை அணிவிப்பதற்குப் பதிலாக ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு உதவிட நிதி அளித்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டேன்.
முழு அடைப்பு போராட்டம்
31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. அனைத்துப் போக்குவரத்துக்களும், விமானம், ரெயில் போக்குவரத்து உள்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஒரு கடை கூடத் திறக்கப்படவில்லை. சென்னையில் நாஞ்சிலார் தலைமையில் பிரமாண்டமான கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், எழுதிக் கொண்டே போகலாம்.

உதவாதினி ஒரு தாமதம், சென்னைக்கு விரைந்திட; உடனே எழுக தமிழா!

கலைஞர் பேச்சு!
இலங்கையில் தமிழினம் படும் துயர் கண்டு தாய்த் தமிழகம் கண்ணீர் வடிக்கிறது என்பதை எடுத்துக் காட்டத் தான் மனிதச் சங்கிலி. எந்த இனமானத் தமிழ் மகன், எந்த மண்ணைத் திருத்தி வளமிகு சோலையாக்கினானோ, அந்த மண்ணிலே அவன் தலை பந்தாடப்படுகின்ற செய்தி கேட்டு, ஆயிரம் செந்தேள் செவியிலே கொட்டியது போல் துள்ளுகிறோம், துவண்டு போகிறோம் - அதனை வெளிப்படுத்தத் தான் மனிதச் சங்கிலி.
முடிவே கிடையாதா?
இலங்கை கொடுமைக்கு ஒரு முடிவு காண இந்திய பேரரசு ஒருக்கணமும் தயங்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தத் தான் மனிதச் சங்கிலி. ஐந்து கோடி தமிழர்கள் மட்டுமல்ல; அயல் நாடுகளில் பரவியுள்ள தமிழ் இனம் முழுவதும் "இதற்கோர் முடிவே கிடையாதா?'' என்று கொதித்துக் கேட்கின்ற நிலையை உலகத்திற்கு வெளிப்படுத்தத் தான் மனிதச் சங்கிலி?
"தென் திசையைப் பார்க்கின்றேன்; என் சொல்வேன் என்றன் சிந்தையெலாம் தோள்கள் எல்லாம் பூரிக்குதடடா!'' எனப் பாடினாரே பாவேந்தர் - அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத் தமிழன் ராவணனின் புகழ் பாடும் கவிதையினைப் படிக்கும் போதெல்லாம் சிந்தையும், தோள்களும் பூரிக்கும் என்பது உண்மை! ஆனால் இன்று, சிந்தையெலாம் தோள்கள் எல்லாம் துடிக்குதடடா! என்ன சொல்வது? என்பதை எடுத்துக் காட்டத் தான் மனிதச் சங்கிலி!
21-ந் தேதி தமிழகத் தலைநகராம் சென்னையிலே நடைபெறும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்கான மனித சங்கிலி சரியாக 3 மணிக்கு தொடங்கும்.
தமிழனாக பிறந்தவன்
தமிழ் உள்ளங்கள் அத்தனையிலும் இன்று தணல் அன்றோ அள்ளி அள்ளிக் கொட்டப்பட்டுள்ளது! வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தொலைபேசி வாயிலாக என்னிடம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கிறார்கள். கண்ணீரோடு நன்றி தெரிவிக்கிறார்கள். அந்த கண்ணீருடன் இணைந்து அவர் தம் கண்களிலே கனல் பறப்பதை அவர்தம் வாய்ச் சொற்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன.
தமிழன் கொல்லப்படுகிறான், அது கேட்டு தமிழனாகப் பிறந்தவனும்- இருப்பவனும் கொதிக்கிறான். இந்த செய்தி உலகத்திற்கு எட்ட வேண்டுமே என்பதற்காக தான் மனிதச் சங்கிலி. உதவாதினி ஒரு தாமதம், சென்னைக்கு விரைந்திட; உடனே எழுக தமிழா!

ஈழப் பிரச்னை - இந்தியாவின் குரல் ஒலிக்க வேண்டும்!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
இலங்கைத் தீவின் மொத்த நிலப்பரப்பு 65 ஆயிரத்து 525 சதுரகிலோ மீட்டர். இதில் 29 சதவீதம் தமிழ் மரபுவழித் தாயகமாகும். இன்றைக்கு சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்குப் பகுதியில் 7 ஆயிரம் சதுர கிலோமீட்டரும், வடக்குப் பகுதியில் 5 ஆயிரம் சதுர கிலோ மீட்டரும் பரப்பளவு உள்ள தமிழர்களின் எதிர்ப்பையும் பொருள்படுத்தாமல் சிங்களர் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
பண்டித நேரு, பெருந்தலைவர் காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் அனைவரும் 1950 - 60-களில் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களைக் குறித்து சிலாகித்துள்ளனர். மூதறிஞர் ராஜாஜி தொடக்கத்தில் இலங்கைத் தமிழர்கள் பூர்வீகத் தமிழர்கள் இல்லை என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு பூர்வீக மைந்தர்கள் என்று திருத்திக் கொண்டேன் என்பதை 1963-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி "மெயில்' ஏட்டில் குறிப்பிட்டுள்ளார்.
சாஸ்திரி, இந்திரா காந்தி காலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தங்களுக்குப் பிறகு இலங்கை அரசுக்கு நாம் எதைச் சொன்னாலும் இந்தியா கேட்கும் என்ற தைரியம் ஏற்பட்டது. அதனால் ஈழத் தமிழர்களை இலங்கையின் பூர்வீக மண்ணின் மைந்தர்கள் என்று கருதாத நிலைமை ஏற்பட்டதால் தான் பிரச்னைகள் சிக்கலுக்கு மேல் சிக்கலாக்கியது.
1948-ல் இலங்கை விடுதலை பெற்றது முதலே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கையின் பூர்வகுடியினராக விளங்குகின்ற தமிழ்மக்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகின்றனர். அதனால்தான் தந்தை செல்வா இதை எதிர்த்து 1949-ல் தமிழ் அரசு கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
1956-ல் திரிகோணமலையில் நடைபெற்ற தமிழ் அரசு கட்சி மாநாட்டில் தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம உரிமை, தமிழர் அனைவருக்கும் குடியுரிமை, தமிழர் பகுதிகளில் சிங்களவரைக் குடியமர்த்துவதைத் தடுப்பது போன்ற கோரிக்கைகள் தீர்மானிக்கப்பட்டு மறியல் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக 1957-ல் செல்வாவும், பண்டார நாயகாவும் இது குறித்து ஓர் ஒப்பந்தத்தைச் செய்த பின்பும் சிங்கள அரசு அதைக் கிடப்பில் போட்டது. 1958-ல் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டு தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டனர்.
1958-ல் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் தமிழில் எழுத முடியாமல் தவித்தனர். 1960-ல் நீதிமன்றம் சிங்களத்தை மட்டும் பயன்படுத்தியது. 1965-ல் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சிக்குப் பெரும்பான்மை இடம் கிடைக்காமல், செல்வா தலைமையில் தமிழ் அரசு கட்சியின் ஆதரவோடு டட்லி சேனநாயகா பிரதமரான பிறகும்கூட தமிழர்களுக்கு மாவட்ட மன்றங்கள், தமிழ் நிர்வாக மொழி என்று அறிவிக்கப்பட்ட உறுதிமொழி குப்பையில் போடப்பட்டது.
1970-ல் சிங்கள மாணவர்களைவிட தமிழ் மாணவர்கள் உயர்கல்விக்குச் சேர வேண்டும் என்றால் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது இலங்கை அரசு. கொதித்தெழுந்தார்கள் தமிழ் மக்கள். அதுதான் தமிழ்ச் சமுதாயம் வெகுண்டெழுந்து போராட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. 1972-ம் ஆண்டு வரை தமிழர்கள் அதிகாரங்களைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பையே வலியுறுத்தினர். இந் நிலையில் தமிழர்களைக் கலந்தாலோசிக்காமல் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, தமிழர்களுக்கு விரோதமாக ஒற்றை ஆட்சி முறை நிறுவப்பட்டது. 24 ஆண்டுகள் இவ்வாறு தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளான ஈழத் தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் 1976-ல் தமிழ் அரசுக் கட்சியும், மலையகத் தமிழர்களும் சேர்ந்து வட்டுக்கோட்டையில் தமிழர்களுக்குத் தனி நாடு கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி - அதன்பின் செல்வா மறைவுக்குப் பின்பு நடந்த தேர்தலில், இக்கோரிக்கையை முன்வைத்து 19 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளைத் தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது. அப்போதுதான் அங்குள்ள தமிழ் மக்கள் முதன்முதலாகத் தனிநாடு கோரிக்கைக்குத் தேர்தல் மூலம் ஆதரவு தெரிவித்தனர்.
1983-ல் நடந்த கொடுமையான இனப்படுகொலையைக் கொடிய அரசு பயங்கரவாதம் என உலகமே கண்டித்து கண்ணீர் வடித்தது. இந்திரா காந்தி காலத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கின்ற ஓர் அணுகுமுறையை, அதேநேரத்தில் இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களையும் பாதுகாத்துக் கொள்கின்ற தொலைநோக்குச் சிந்தனை கொண்ட ஓர் அணுகுமுறையை அவர் வகுத்தார் என்பதை மறுக்க இயலாது. இந்திரா அம்மையாரின் மறைவுக்குப் பிறகுதான், இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் அணுகுமுறை முற்றிலுமாக மாறத் தொடங்கியது எனலாம். ஈழத் தமிழர் பிரச்னையில் நடந்த கசப்பான சம்பவங்களைக் கொண்டே பிரச்னையைப் புறந்தள்ள முடியாது. கடந்த காலங்களில் ஏற்பட்ட கவலைகள், துக்கங்கள் இருந்தாலும் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் பஞ்சாப் பிரச்னையில் இந்திய அரசு தலையிட்டு தீர்வை ஏற்பட அக்கறை செலுத்தியது போலவே ஈழப் பிரச்னையிலும் கடந்தகால துன்பவியல் சூழலை மட்டும் மனதில் கொள்ளாமல் ஈழத் தமிழரைப் பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியாவின் பாதுகாப்புப் பிரச்னையும் அடங்கியுள்ளது. 1970-களில் இந்திய மகா சமுத்திரத்தில் அமெரிக்க ஆயுத தளம் டீகோகரசியா பிரச்னையில் இந்தியாவும், சோவியத் யூனியனும் கண்டனக் குரல் எழுப்பியபோது இலங்கை அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்தது. ஒரு காலத்தில் திரிகோணமலை துறைமுகத்தை மேற்கத்திய ஆதிக்க சக்திகள் இந்தியாவை மனத்தில் கொண்டு அப்பகுதியைக் குத்தகைக்குக் கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டன.
அப்போதெல்லாம் இந்திய பாதுகாப்புக்குப் பிரச்னை ஏற்படும் என்று ஈழத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியதை நாம் மறுக்க முடியாது.
ஈழத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் இந்தியாவையும் நேசிக்கின்றனர். கடந்த காலங்களில் இந்தியாவோடு சீனா, பாகிஸ்தான் போர் தொடுத்தபோது நிதி அளித்தது மட்டுமல்லாமல் சகோதர பாசத்தோடு இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர் என்பது வரலாற்றுச் செய்திகள். அன்றைக்கு ஈழத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட செல்வநாயகம் சீனாவையும், பாகிஸ்தானையும் கடுமையாகக் கண்டித்து நாடாளுமன்றத்தில் பேசினார். இந்தியாவுக்கு நிதி சேர்த்து அங்குள்ள தமிழர்கள் நேரு பிரதமராக இருந்தபோது அனுப்பினர். ஆனால், சிங்கள அரசோ சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆதரவாக மௌனம் சாதித்தது.
1987-ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு ராஜீவ் காந்தி இலங்கைக்குச் சென்றபோது, இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த ரோகனா விஜய் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியும், 1990-ம் ஆண்டு அக்கொடியவனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட செய்தி, இலங்கை ஒருமைப்பாட்டை கவலைகொள்ளும் இந்திய அரசுக்குத் தெரியுமா?
இலங்கைக்கான பாகிஸ்தானின் தூதராகச் செயல்படும் பசீது வாலி முகமது முயற்சியால் பாகிஸ்தானிலிருந்து இரண்டு கப்பல் ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. அக்கப்பல் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ல் இலங்கைத் துறைமுகத்திற்கு வந்தது. இந்த பசீது வாலி வேறு யாருமில்லை; இந்தியாவில் குழப்பத்தையும், தீவிரவாதத்தையும் ஊக்குவித்த ஐ.எஸ்.ஐ.-இன் முன்னாள் தலைவர் என்பது மத்திய அரசுக்குத் தெரியுமா? இன்றைக்கு இந்த பசீது வாலி இலங்கை அரசுக்கு உண்மைத் தோழனாக - உற்ற நண்பராக இருக்கிறார். இது மத்திய அரசுக்குத் தெரியுமா?
இலங்கையின் ஒருமைப்பாடு என்று சொல்லிக்கொண்டே இந்தியா இருக்காமல் எதார்த்த நிலை அறிந்து கடமையாற்ற வேண்டும். இலங்கைக்கு வழங்கிய ராடார்கள் திரும்பப் பெற வேண்டும்; அங்கு அனுப்பப்பட்ட ராணுவப் பிரிவினரைத் திரும்ப அழைக்க வேண்டும். இந்தியா கடன் கொடுப்பதாகச் சொன்ன உத்தரவாதத்தை ரத்து செய்ய வேண்டும். இந்தியக் கடற்படையும் இலங்கைக் கடற்படையும் ஏற்றுக்கொண்ட தகவல் பரிமாற்றத்தை நிறுத்த வேண்டும். இந்தியாவில் ஒருபொழுதும் இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சி கொடுக்கக் கூடாது. ஐ.நா. மன்றத்தின் அலுவலகத்தைக் கொழும்பில் தொடங்குவதற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர் பகுதியில் உண்மை நிலவரங்களை அறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை இந்தியா அனுப்ப வேண்டும். சிங்களத் தலைவர்கள் - இந்தியத் தலைவர்களை அடிக்கடி சந்திப்பதைப் போன்று ஈழத் தமிழர் தலைவர்களும் இந்திய அரசாங்கத்தையும், இந்திய அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து தங்களுடைய பிரச்னைகளை விவாதிக்க வாய்ப்புத் தர வேண்டும்.
பாலஸ்தீனத்திற்கும், வங்க தேசத்திற்கும் கிழக்குத் தைமூருக்கும், ருவாண்டா பட்டினிப் பிரச்னையிலும் ஈரான், இராக், நேபாளம் போன்ற சர்வதேச பிரச்னைகளில் கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகளைப் போன்று அருகில் உள்ள இலங்கையின் பிரச்னையைத் தீர்க்கவும் இந்தியா முன்வர வேண்டும் என்பதுதான் தமிழினத்தின்மீது அக்கறை உள்ளவர்களின் கோரிக்கை, வேண்டுகோள் எல்லாமே!
நன்றி: தினமணி.

Monday, October 13, 2008

நேரு பாதையிலிருந்து விலகிய மன்மோகன்

பழ. நெடுமாறன்.

1938-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஸ்பெயினில் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார ஆட்சியை நிறுவியிருந்த பிராங்கோவைக் கண்டித்தும், சீனாவின் மீது படையெடுத்து ஜப்பானிய ராணுவம் செய்துவரும் அட்டூழியங்களைக் கண்டித்தும் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஸ்பானியப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான வாபாசி லோனாரா என்பவரும் ஜவாஹர்லால் நேருவும் கலந்துகொண்டு பேசினார்கள்.
ஐரோப்பாவில் ஹிட்லர், முசோலினி ஆகியோர் தலைமையில் பாசிசம் படர்ந்து கொண்டிருந்த வேளை. அவர்களைப் பின்பற்றி ஸ்பெயின் நாட்டிலும் பிராங்கோ பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவியதற்கு எதிராக ஜனநாயக உணர்வு படைத்தவர்கள் போராடினார்கள். ஐரோப்பா முழுவதுமிருந்த ஜனநாயகவாதிகள் இப்போராட்டத்திற்கு ஆதரவாகத் திரண்டார்கள். பிரிட்டனில் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளத் தொண்டர்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்டார்கள். ஜவாஹர்லால் நேருவின் மருமகனும் இந்திராவின் கணவருமான பெரோஸ் காந்தியும் அவர்களில் ஒருவராவார். ஸ்பெயின் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக நடைபெற்ற இப்போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஆதரவை அளிப்பதற்காக நேரு இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பாரிஸிலிருந்து வெளிவந்த ரூடி பிராவோ எனும் பத்திரிகைக்கு ஸ்பெயின் போராட்டம் பற்றி உணர்ச்சிகரமான ஒரு நேர்காணலை நேரு அளித்தார்.
ஸ்பெயின் நாட்டு எல்லைக்குச் சென்று அங்கு முகாமிட்டிருந்த போராட்ட வீரர்களை நேரில் சந்தித்து ஊக்குவித்தார்.
ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நவம்பர் 17-ம் தேதி இந்தியா திரும்பிய நேருவுக்கு மும்பையில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் உள்நாட்டுப் போரின் விளைவாக அம்மக்கள் உணவு, மருந்து இல்லாமல் படும் துயரம் குறித்து அக்கூட்டத்தில் நேரு உருக்கமாகப் பேசினார். அம்மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் மருந்துப் பொருள்களையும் திரட்டி அனுப்பி வைக்கும்படி மும்பை வணிகர்களை வேண்டிக்கொண்டார். அதற்கிணங்க உணவுப்பொருள்களும் மருந்துப் பொருள்களும் ஒரு கப்பல் நிறைய இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
1939-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி சீனா சென்ற நேரு 13 நாள்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்தார். ஜப்பானியர் படையெடுப்பின் விளைவாக சீரழிந்து கிடந்த சீன மக்களின் துயரங்களைப் பகிர்ந்து கொண்டார். அங்கிருந்து திரும்பியவுடன் காங்கிரஸ் தலைவராக இருந்த சுபாஷ் சந்திரபோûஸச் சந்தித்து சீன மக்களின் துயரங்களை விளக்கினார். உடனடியாக காங்கிரஸ் சார்பில் மருத்துவ உதவிக்குழு ஒன்றினை அனுப்பி வைப்பதென முடிவு செய்யப்பட்டு டாக்டர் கோட்னீஸ் தலைமையில் குழு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த காலக்கட்டத்தில்கூட பாதிக்கப்பட்ட மக்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஓடோடிச் சென்று அவர்களுக்கு உதவுவதை அன்றைய காங்கிரஸ் கட்சி செய்தது. ஸ்பெயினுக்கும் சீனாவுக்கும் காங்கிரஸ் கட்சி செய்ய முன்வந்த மனித நேய உதவிகளை அன்றைய பிரிட்டீஷ் அரசே தடுக்கவில்லை.
ஆனால் இன்று என்ன நடக்கிறது? காங்கிரஸ் கட்சி பாரம்பரியத்திற்கு இழுக்கு நேரும் வகையில் அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் சிங்கள இனவெறியரால் கொன்று குவிக்கப்படுவதைப் பார்த்தும் பாராமுகமாக இருக்கிறது. பசியும் பட்டினியுமாகக் கிடக்கும் ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டிய இந்தியா அவர்களை அழிப்பதற்கு சிங்கள அரசுக்கு ஆயுத உதவியும் ஆள் உதவியும் செய்கிறது. இந்திய ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியே இதை உறுதி செய்திருக்கிறார்.
இலங்கையில் நடைபெற்று வரும் போரில் சிங்களப் படைக்கு உதவியாக இந்தியப் படைவீரர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என இந்திய ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியான மிலன் லலித் குமார் கூறியுள்ளார்.
மண்டபத்தில் ஹிந்து செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
இலங்கைக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் அவ்வப்போது செல்கிறார்கள். சிங்கள ராணுவத்திற்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டுத் திரும்பி விடுகிறார்கள். இலங்கையில் ராடார் சாதனங்களை இயக்கிய இரண்டு இந்திய ராணுவத் தொழில்நுட்ப வல்லுநர்கள் புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்திருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. காயமடைந்தவர்கள் ஒருவேளை சிவிலியன்களாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
இந்திய ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியாக இருக்கும் ஒருவருக்கு இந்திய அரசியல் சட்டம் குறித்தும் உலக நாடுகளின் சட்டங்கள் குறித்தும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். வெளிநாடொன்றில் நடைபெறும் போரில் இந்தியாவின் குடிமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அதற்கான அனுமதியை இந்திய அரசிடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் அவர்கள் சென்றிருப்பார்களேயானால் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராடார் சாதனங்களை இயக்கியவர்கள் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் சிவிலியன்கள். அவர்களாகவே சென்றிருக்கிறார்கள் என்பது உண்மையானால் இந்திய அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதுமில்லை என்பதும் உண்மையானால் அதே உரிமை தமிழர்களுக்கும் உண்டு.
இலங்கையில் கொன்று குவிக்கப்படும் தமிழர்களைப் பாதுகாக்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் செல்வதையும் இந்திய அரசு தடுக்க முடியாது. இந்திய ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியின் கூற்று இதற்குத்தான் தமிழர்களைத் தூண்டுகிறது.
கடந்த 30 ஆண்டு காலத்தில் இலங்கையில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியின்றி இந்தியா உள்பட உலக நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.
ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து உண்ண உணவோ உறைவிட வசதிகளோ இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவ தமிழ்நாட்டு மக்கள் திரட்டிய உணவு, மருந்துப் பொருள்களை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுப்பி வைக்க அனுமதி தரக்கூட இந்திய அரசு மறுக்கிறது. தமிழக அரசும் வாய்மூடி மௌனம் சாதிக்கிறது.
இந்தியாவிலுள்ள வேறு எந்த மொழி பேசும் தேசிய இனமும் இப்படியோர் அவலநிலையை இதுவரை சந்தித்தது இல்லை. வங்காளி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி மற்றும் இந்தி மொழி பேசுகிற இனத்து மக்கள் வேறு எந்த நாட்டிலாவது வாழ்ந்து இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக நேர்ந்தால் அதைப் பார்த்துக்கொண்டு மேற்கண்ட மொழி பேசும் இன மக்கள் சும்மா இருந்திருப்பார்களா? இந்திய அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்து போராடி இருப்பார்கள்.
சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமரான நேரு எந்த நாட்டுடனும் ராணுவ உடன்பாடு செய்து கொள்ள மறுத்தார். அமெரிக்க வல்லரசு, நேட்டோ, சீட்டோ என பல்வேறு நாடுகளை ராணுவ ரீதியான கூட்டு உடன்பாடு நாடுகளாக உருவாக்கி சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அணி திரட்டியது. அதைப்போல சோவியத் ஒன்றியமும் தங்களின் தற்காப்புக்காக வார்சா உடன்பாடு நாடுகளின் அணியை உருவாக்கிற்று.
ஆனால் நேரு இந்த ராணுவ கூட்டுகளைக் கண்டித்தார். அதுமட்டுமல்ல, புதிதாக விடுதலை பெற்ற ஆசிய ஆப்பிரிக்க நாடுகளை ஒன்றிணைந்து அணிசாரா நாடுகளின் குழு ஒன்றினை உருவாக்கினார். அவருடைய இந்த தொலைநோக்குப் பார்வையின் விளைவாக மூன்றாம் உலகப் போர் மூளுவது தடுக்கப்பட்டது.
ஆனால் நேருவின் வழி வந்ததாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் மன்மோகன் சிங் அரசு, இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கி வரும் சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளித் தருகிறது.
அன்பு நெறியைப் போதித்த மகாவீரரும், புத்தரும், காந்தியடிகளும் பிறந்த மண்ணிலிருந்து ஆயுதங்கள் இலங்கைக்கு அனுப்பப்படுகின்றன. அந்த ஆயுதங்களின் துணை கொண்டு ஈழத்தமிழர்களை மட்டுமல்ல தமிழ்நாட்டு மீனவர்களையும் சிங்கள வெறியர்கள் கொலை செய்கிறார்கள். நமது குடிமக்கள் நமது எல்லைக்குள்ளேயே படுகொலை செய்யப்படுவதைப் பார்த்த பின்பும் மன்மோகன் அரசுக்கு பதைபதைப்பு வரவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழர் அமைப்புகளும் கூட்டாகவும் தனியாகவும் போராட்டங்கள் நடத்திய பிறகுகூட மத்திய அரசு தன்னுடைய தவறைத் திருத்திக் கொள்ள முன்வரவில்லை.
காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்திற்கும் நேரு பெருமகனாரின் தொலைநோக்கு சிந்தனைக்கும் கொஞ்சமும் தொடர்பற்ற அரசாக மன்மோகன் சிங் அரசு விளங்குகிறது. நேருவின் காலத்தில் சூயஸ் கால்வாய்ப் பிரச்னையில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் கைகோர்த்து எகிப்துக்கு எதிராகக் களம் இறங்கியபோது, இப்பிரச்னையில் உலக நாடுகளின் கருத்தைத் திரட்டுவதற்காக வி.கே. கிருஷ்ணமேனனை நேரு தனது தூதுவராக அனுப்பினார்.
அதைப்போல, பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து சிங்கள அரசுடன் பேசுவதற்கு மூத்த ராஜதந்திரியான ஜி. பார்த்தசாரதியை அனுப்பினார். நேருவோ இந்திராவோ சர்வதேசப் பிரச்னைகளுக்கு ஒருபோதும் அதிகாரிகளை அனுப்பியதில்லை. ஆனால் மன்மோகன் சிங், எம்.கே. நாராயணன், சிவசங்கர் மேனன் போன்ற அதிகாரிகளை இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண நம்பியிருக்கிறார். அவர்களைத்தான் அனுப்பி வைக்கிறார். ராஜதந்திர பார்வையும் தொலைநோக்கிச் சிந்தனையும் அறவே இல்லாத அதிகாரிகள் இப்பிரச்னையை மேலும் சிக்கலாக்கிவிட்டார்கள்.
இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உள்பட்ட இலங்கையில் எது நடந்தாலும் அது இந்தியாவையும் பாதிக்கும் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் மன்மோகன் சிங் அரசு செயல்படுகிறது. இந்த அரசின் தவறான அணுகுமுறைகளின் விளைவாக ஈழத் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதோடு இந்தியாவுக்கு எதிரான நாடுகள் இலங்கையில் காலூன்றி நிற்கும் அபாயம் உள்ளது. நேருவும் இந்திராவும் சர்வதேசப் பிரச்னைகளில் மிகவும் தேர்ந்த ராஜதந்திரிகளைத் தங்களுக்குத் துணையாகக் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகத்தான் அணிசாரா நாடுகளின் தலைமை இந்தியாவைத் தேடி வந்தது. ஆனால் இன்று சுற்றிச் சுற்றி வரும் செக்குமாடுகளைப்போல குறிப்பிட்ட சிந்தனை வளையத்திற்குள் சிக்கிக் கிடக்கும் அதிகாரிகள் தவறான ஆலோசனைகளை வழங்கி உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையைக் கெடுத்து விட்டார்கள்.
தமிழக மக்களின் கொதிப்புணர்வை இந்திய அரசுக்கு உணர்த்தி சரியான நடவடிக்கை எடுக்கும்படி தூண்ட வேண்டிய தமிழக முதல்வரும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்களும் ஒப்புக்காக ஏதோ பேசுகிறார்களே தவிர உண்மையில் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யத் தவறிவிட்டார்கள்.
இவர்களின் இந்த மகத்தான தவறை வரலாறு பதிவு செய்துள்ளது. இன்றைய தலைமுறையும் நாளைய தலைமுறையும் இவர்களை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.

Sunday, October 5, 2008

செந்தமிழ்க் களஞ்சியம் "மே.வீ.வே.'

க‌ட்டுரை ஆசிரிய‌ர்: முனைவ‌ர் ப‌.ச‌ர‌வ‌ண‌ன்

"இலக்கணத் தாத்தா'' என்று அறிஞர் பெருமக்களால் அன்போடு அழைக்கப்பட்ட பெருமைமிக்கவர் வித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை. தமிழ்த்தொண்டே தம் தொண்டு எனக் கொண்டுழைத்த அவர், புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை மரபைச் சார்ந்தவர். ஒரு பெரிய நிறுவனம் சாதிக்க வேண்டிய, சாதிக்க முடியாத அருந்தமிழ்ப் பணியை ஆற்றி மறைந்தவர்.

மே.வீ.வே. சென்னை, சைதாப்பேட்டை மேட்டுப்பாளையத்தில் 1896 ஆகஸ்ட் 31-ம் தேதி பிறந்தார். தமது இளமைக் கல்வியை சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் தொடங்கினார். ஆனால் வறுமையின் காரணமாகக் கல்வியைத் தொடர முடியவில்லை. அப்போது சென்னை வேப்பேரியில் உள்ள எஸ்.பி.சி.கே. அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகவும், அஞ்சலகத்திலும், வழக்குரைஞர்களிடத்தும் உதவியாளராகவும் பணிபுரிந்தார். என்றாலும், தமிழார்வம் காரணமாக கா.ர.கோவிந்தராச முதலியாரிடத்தில் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். கலாநிலையம் சேஷாசல ஐயர் நடத்தி வந்த இரவுப் பள்ளியில் ஆங்கிலமும் கற்றார். அதன்பின்பு வித்துவான் தேர்வில் வெற்றி கண்டு பட்டம் பெற்றார்.

1920-ல் சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், புரசைவாக்கம் பெப்ரீஷியல் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாகப் பணியை விட்டு விலக நேர்ந்தது. எனினும் பணியினை துறந்தாரே அன்றி தமிழைத் துறக்கவில்லை. 1928-ல் தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கத்தின் துணைத் தலைவர் தேர்வு, வித்துவான் தேர்வு முதலியவற்றிற்குரிய தனி வகுப்புகளை நடத்தி வந்தார். தேர்வுகளில் தேர்ச்சி அடைவதற்காக மட்டும் பாடம் சொல்லித் தரும் இன்றைய ஆசிரியர்களைப் போல் அல்லாமல் தமது மாணவர்கள் அறிஞர் பலரும் வியக்கும்படி புலமைப் பெற்றுத் திகழ வேண்டும் என்று விரும்பியவர் மே.வீ.வே. அவர் தமது மாணவர்களை நோக்கி,

""வித்துவான் பட்டம் பெற்றீர்கள். அதனைக் காற்றில் பறக்கவிடும் பட்டமாக்காதீர்கள். மேன்மேலும் பயின்று தக்க அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்; பிறருக்கும் வழங்குங்கள். வழியில் கேட்ட ஐயத்திற்கு வீட்டில் விடை எண்ணாதீர்கள். தக்கவாறு பொருள் உணர்ந்து கேட்போர் ஐயமற வெளியிடுங்கள்'' என்று கூறுவதிலிருந்து தமது மாணாக்கர் எப்படித் திகழ வேண்டும் என்று விரும்பினார் என்பதை அறியலாம்.

புரசை-லுத்ரன் மிஷன் பள்ளிப் பாதிரியார்களால் நடத்தப்பட்டு வந்த குருகுல மதக் கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராக இவர் பணியாற்றிய போது ஜெர்மானியர் பலருக்கும் தமிழ் போதிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவரிடம் தமிழ் பயின்ற ஜெர்மானியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் டாக்டர். ஸ்டாலின், டாக்டர். கிராபே (இவர் பெரிய புராணத்தை ஜெர்மனியில் மொழிபெயர்த்த எல்வின் மகள்), ஹில்டகார்டு மற்றும் பலர். இதேபோல, செக்.நாட்டு திராவிட மொழி ஆராய்ச்சியாளர் டாக்டர் கமில்சுவலபிலும் மே.வீ.வே.யின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவலபில், மே.வீ.வே. மீது அதிக மரியாதை கொண்டிருந்தார் என்பதை அவர் எழுதிய தமிழகச் சித்தர்களைப் பற்றிய பட்ங் ல்ர்ங்ற்ள் ர்ச் ற்ட்ங் ல்ர்ஜ்ங்ழ்ள்என்னும் நூலில் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு "எனது குரு' என்று குறிப்பிட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்ற மே.வீ.வே. பாடம் போதிக்கும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் எழுதுவதிலும் இவருக்கு இணை இவரே. டாக்டர். உ.வே.சா. கூட தாம் பதிப்பிக்கும் நூல்களில் சில குழப்பங்களுக்கு மே.வீ.வே.வையே நாடினார் என்பதும் இங்கே பதிவு செய்யக் கூடிய விஷயமாகும்.

தமிழ் மொழியை தொல்பொருள் ஆராய்ச்சியாக ஆராய்ந்த சிற்பி மே.வீ.வே. அரசாங்க இலக்கிய-இலக்கண பாடநூல் குழுவிலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகத் தமது இறுதிக் காலம் வரை இவர் இருந்துள்ளார். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணப் பதிப்புக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

மே.வீ.வே. தாமாக முயன்று பதிப்பித்த நூல்கள் இறையனார் அகப்பொருள், தொல்.சொல் (நச்சர் உரை), தஞ்சைவாணன் கோவை, வீரசோழியம், யாப்பருங்கலம், காரிகை, அஷ்டபிரபந்தம், யசோதரகாவியம், நளவெண்பா முதலியன. இலக்கண உலகில் இவர் பதிப்பித்த யாப்பருங்கலக்காரிகை இன்றும் அறிஞர்களால் போற்றப்படுகிறது. இதற்கு இணையான ஒரு பதிப்பு இன்றுவரை இல்லை என்றே கூறலாம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை மீள்பதிப்பு செய்துள்ளது. இவர் பதிப்பாளராக மட்டுமன்றி படைப்பாளராகவும் இருந்துள்ளார். பத்திராயு(அ) ஆட்சிக்குரியோர், திருக்கண்ணபிரானார், அற்புதவிளக்கு, குணசாகரர் (அ) இன்சொல் இயல்பு, அரிச்சந்திர புராணச் சுருக்கம், அராபிக்கதைகள் முதலியன இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இது தவிர "அம்பலவாணன்', "இளங்கோவன்' என்னும் இரு புதினங்களையும் படைத்துள்ளார். இவரது பதிப்புப்பணி-படைப்புப்பணி குறித்துத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. பின்வருமாறு கூறுகிறார்.

""திரு.வேணுகோபாலப்பிள்ளை விளம்பரமின்றி ஆரவாரமின்றி, அமைதியில் நின்று தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்வோருள் ஒருவர். திரு.பிள்ளை, நூல்களைப் பிழையின்றி பதிப்பிப்பதில் பெயர் பெற்றவர். இவரது தமிழில் தமிழூர்தல் வெள்ளிடைமலை. தமிழறிஞர் வேணுகோபாலரின் பிழையற்ற உரைநடை, தற்போது கறைபட்டுள்ள தமிழுலகைத் தூய்மைச் செய்யும் பெற்றி வாய்ந்தது'' (நவசக்தி 8.4.1938).

திருத்தமான செயல்களுக்கு அடிப்படை மொழியே. மொழி செப்பமாக இல்லாவிட்டால் கருதிய எச்செயலும் கருதியபடி நடவாது என்பதை உணர்ந்த மே.வீ.வே. மொழியில் பிழை நேராதபடி எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளார். ""தமிழ் நூல்கள் சிறியவையாயினும் பெரியவையாயினும் பிழையின்றி திருத்தமான முறையில் கண்கவர் வனப்புடன் வெளிவருதல் வேண்டும் என்பதே என் வாழ்வின் குறிக்கோள்'' என்னும் அவரின் கூற்றே இதற்குப் போதிய சான்று.

1939-45-ல் உலகையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் சென்னையையும் விட்டு வைக்கவில்லை. அதனால் பாதிப்புக்குள்ளான பலர் பல்வேறு இடங்களில் சிதறினர். மே.வீ.வே. காஞ்சிபுத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கும் அவரது தமிழ்ப்பணி ஓயவில்லை. "கச்சித் தமிழ்க் கழகம்' என்னும் ஓர் அமைப்பை நிறுவி பலருக்கும் தமிழ் உணர்வை ஊட்டினார். அத்துடன் சீவகசிந்தாமணி குறித்து நெடியதோர் சொற்பொழிவாற்றினார். இவரது பேச்சைக் கேட்ட பலரும் இவரை சமண மதத்தவர் என்றே எண்ணலாயினர். அதனால்தான் திரு.வி.க. "சிந்தாமணிச்செல்வர்' என்னும் பட்டமளித்து இவரைப் பாராட்டினார். சுவாமி விபுலானந்த அடிகளும் ""உமது தமிழறிவு நாட்டிற்குப் பயன்படுவதாகுக'' என்றும் பாராட்டி மகிழ்ந்தார்.

இது தவிர "செந்தமிழ்க்களஞ்சியம்' (அறிஞர் அண்ணா வழங்கியது), "கன்னித் தமிழ்க்களஞ்சியம்', "கலைமாமணி' ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நியூயார்க் உலகப் பல்கலைக்கழகம் மே.வீ.வே.க்கு டாக்டர் பட்டம் வழங்கி கெüரவித்தது.

படிப்பது, எழுதுவது, பதிப்பிப்பது, பாடம் சொல்லித்தருவது என்ற வட்டத்துக்குள்ளேயே தமது வாழ்நாளைக் கழித்தவர். எந்த ஒரு நூலையும் நன்கு படித்து தேர்ந்த பின்னரே அதைப் பற்றிய கருத்தையோ விளக்கத்தையோ கூறும் இயல்புள்ள இவர், அரைகுறையாகப் படித்துவிட்டு கருத்துக் கூறுவது தவறு என்று பிறருக்கு அறிவுரை கூறுவார்.

தமிழ் இலக்கிய உலகில் 89 ஆண்டுகள் வரை உலவிய மே.வீ.வே. 4.2.1985 அன்று இரும்புண்ட நீரானார். நல்லவர்கள் உதிப்பதும்-மறைவதும் நன்நாளில் என்பதற்கேற்ப இவர் கோகுலாஷ்டமியில் பிறந்து தைப்பூசத்தில் மறைந்தார். இவரது பெருமையை பறைசாற்றும் வகையில் ஜெர்மனி கோல் பல்கலைக்கழகம் இவரது பெயரைச் சூட்டி கெüரவித்தது. தமிழக அரசு இவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி மகிழ்ந்தது.

இவை அனைத்தினூடே கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட பலரும் எழுதிய ""பாவலர் போற்றும் மகாவித்துவான் மே.வீ.வே.'' என்னும் தொகுப்பு நூல் இவரது புகழை இன்றளவும் பேசிக்கொண்டிருக்கிறது.

ந‌ன்றி: தின‌ம‌ணி

புலவர்களின் தன்மான உணர்ச்சி!

க‌ட்டுரை ஆசிரிய‌ர்: க‌.சிவ‌ம‌ணி
சங்கப் புலவர்களின் பாட்டுத் திறமும், பாடல்களை நிலைக்களனாகக் கொண்டு பாடுபொருளை எடுத்தியம்பும் பாங்கும் நம்மை வசீகரிக்கச் செய்வதோடு வளமான வாழ்வை நோக்கி நம்மை அழைத்துச் செல்வதாகவும் உள்ளமை வெளிப்படை. அத்தகைய சங்கப் பாடல்களின் வழி அறியப்படும் புலவர்களின் தன்மான உணர்வு வெளிப்படும் இடங்கள் பல உள்ளன.

சங்க காலத்தில் அரசனுக்குத் தோன்றாத் துணையாகப் புலவர்கள் செயல்பட்டு வந்தனர். நாட்டை ஆளும் அரசனின் செயல்பாடுகளில் குற்றங்கள் தென்படின், குற்றங்களைச் சுட்டிக்காட்டித் திருத்தும் பெரும் பொறுப்பும் புலவர்களுக்கு இருந்தது. அத்தகைய புலவர்களின் அறிவுரைகளைச் சிரமேற் கொண்டு செயல்படும் அரசர்கள், புலவர்கள் விரும்பும் பரிசை அள்ளிக்கொடுத்து மகிழ்வித்தல் சங்ககால மரபு. இதனால் புலவர் குழாம் ஓரளவு வறுமை நீங்கிச் செழுமை கண்டன.

அரசரைப் புகழ்ந்து, பாடிப் பரிசில் பெற வேண்டிய சூழலில் புலவர்கள் இருப்பினும் பரிசுக்காக மட்டும் அரசரைப் பாடி இரந்து நிற்கும் வழக்கம் ஒரு போதும் இருந்ததில்லை. மன்னரைப் பாடிப் பரிசுபெற வந்த புலவர்கள் தங்களுக்கு அரசவையில் உரிய மரியாதை கிடைக்கப் பெறாத நிலையும் புலவர்களுக்கு இருந்து வந்ததுண்டு. இத்தகு சூழ்நிலையில் பரிசைப் பெறாமல் திரும்பிவிடுவர். இத்தகைய காட்சிகள், சங்கப் புலவர்களின் தன்மான உணர்வை வெளிப்படுத்தி நிற்கின்றன.


மன்னர்-புலவர் உறவு


சங்க காலத்தில் புலவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மரியாதையை எடுத்தியம்பும் பாடல்கள் அனேகம். மன்னர்களின் உள்ளத்தில் புலவர்க்கென எத்தகைய இடம் தந்தனர் என்பதைக் கீழ்க்காணும் பாடல் விளக்கி நிற்கிறது. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பைப் பற்றிய பாடல் ஒன்றைச் சான்றாகக் காட்டுதல் பொருந்தும்.


""பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புனனே

செல்வக் காலை நிற்பினும்

அல்லற்காலை நில்லலன் மன்னே''

(புறம்-215,7-9)


இந்தப் பாடலில், "செல்வம் என்னிடம் குவிந்த காலத்து என்னைக் காண பிசிராந்தையார் வராவிட்டாலும், எனக்கு துன்பம் ஒன்று வந்து சேரும் சூழல் ஏற்படுமாயின் அப்போது என்னைக் காண வந்துவிடுவார்' என்கிறார்.

இதன் மூலம் மன்னரும் புலவரும் எத்தகைய புரிதலைக் கொண்டிருந்தனர் என்பதைத் தெளிவுபடுத்திச் செல்கிறது.

அரசனை நாடிச் சென்று பாடிப் பரிசில் பெற எண்ணிப் புலவர்கள் செல்லும்போது புலவர்களின் வறுமை நிலையைப் புரிந்து கொண்டு தேவையான உதவிகளை வழங்குதல் மன்னனின் கடமை. இச் சூழ்நிலையில் பரிசை அரசன் வழங்குதல் முக்கியமில்லை. இன்முகத்துடன் புலவரை வரவேற்று அப்பரிசை வழங்குகிறானா என்பதே கருதத்தக்கது. புலவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து உரிய பரிசினைத் தந்து மகிழ்வித்தல் வேண்டும்.

இனி வரும் பெருந்தலைச்சாத்தனாரின் பாடல், தன்மான உணர்வு மிக்க புலவர்களின் ஒட்டுமொத்தக் குரலாக அமைந்திருத்தலை எடுத்தியம்புகிறது.


""முற்றிய திருவின் மூவர் ஆயினும்

பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே''

(புறம்-205-1-2)


என்ற வரிகள், பரிசில் வழங்கும் புரவலன் செல்வம் கொழிக்கும் மூவேந்தர்களாயினும் மனதில் அன்பு இன்றிக் கொடுத்தால் அதனை ஏற்கமாட்டோம் என்பதைப் பறைசாற்றுவதன் வாயிலாக, புலவர்கள் தன்மான உணர்ச்சி மேலோங்கப் பெற்றவர்களாக இருந்து வந்த நேர்த்தி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதைப் போன்றே, பரிசில் நீட்டித்த மூவன் என்ற மன்னனைப் பற்றிப் பாட வந்த பெருந்தலைச்சாத்தனார் கூறும் உவமை சிந்திக்கத்தக்கது.

மூவன் என்ற அரசனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் நாரை முதலிய அஃறிணை உயிர்கள் கூட மதுவுண்ட களைப்பில் கண்துயிலும். இத்தகு வளமிக்க நாட்டை உடைய மன்னா! உனைக் காணவந்த புலவர்கள் பரிசு பெறாமல் மீளும் நிலையை உருவாக்கக் கூடாது என்ற கருத்தை மூவனுக்குப் புரியவைக்க எண்ணிய புலவர்,

""பலகனி நசைஇ அல்கு விசும்பு உகந்து

பெருமலை விடரகம் சிலம்ப முன்னி

பழனுடைப பெருமரம் தீர்ந்தென கையற்று

பெறாது பெயரும் புள்ளினம் போல''

(புறம்-209-7,10)


என்ற வரிகளில், பல்வேறு மலையிடங்களில் பழுத்த கனிகள் செறிந்த மரங்களை நாடிச் சென்ற பறவைகள், பருவம் மாறிய நிலையில் பழங்களற்ற வெற்று மரங்களைக் கண்டு ஏமாற்றமடைந்து திரும்புதலைப் போல நீயும் எங்களுக்குப் பரிசில் தர மறுத்தால் நாங்கள் வருந்துவோம் என்று கூறுகின்றார். இங்கு புலவரின் வருத்தம் மேலிடுவதாகத் தோன்றினாலும் அஃறிணை உயிர்கள் கூட தாம் வேண்டுவனவற்றைப் பெற்றுத் துய்க்கும் வளமுள்ள நாட்டில் என் போன்ற புலவர்களுக்கு ஈயாமல் இருத்தல் உன் ஆட்சிக்கு அழகல்ல. எனவே புலவர்க்கு ஈதலே மன்னர்க்கு அழகு என மறைமுகமாக இடித்துரைப்பதில் புலவரின் தன்மான உணர்ச்சி வெளிப்படக் காணலாம்.

அரசனைக் கண்டு அவன் திறம் பாடிப் பரிசில் பெற்றுச் செல்வதையே விரும்புவர் புலவர். அவ்வாறு பரிசில் பெறக் கருதி அரசனிடம் சென்ற புலவரை உதாசீனப்படுத்தும் விதத்தில் பரிசுப்பொருளைத் தானே முன்னின்று வழங்காமல் வேறொருவரிடம் கொடுத்து அளிக்கச் செய்வதைப் புலவர்களின் தன்மான உள்ளம் என்றும் ஏற்றதில்லை.

அதியமான் நெடுமான்அஞ்சியிடம் பரிசில் பெறக் கருதி நெடுந் தொலைவிலிருந்து வந்த பெருஞ்சித்திரனார், தானே முன் வந்து பாராட்டிப் பரிசு தரத்தவறிய அரசனின் செயலை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசன் தரும் பரிசு தினை அளவுடையதாயினும் விருப்புடன் நேரில் தருதலையே விரும்பும் எம் உள்ளம் என்பதைக் கூற வந்த புலவர்,


""காணாது ஈத்த இப்பொருட்கு யான் ஓர்

வாணிகப் பரிசிலன் அல்லென், பேணி

தினை அனைத்து ஆயினும் இனிது-அவர்

துணை அளவு அறிந்து நல்கினர் விடினே''

(புறம்-208,6-9)


என்ற வரிகள், என் பாட்டுத் திறத்தின் பாங்கறிந்து நேரில் வந்து பரிசு வழங்காத நிலையைக் கண்டிப்பதோடு வெறும் பொருளை மட்டும் விரும்பிப் பாடும் வாணிகப் பரிசிலன் அல்லன் யான் என்பதை நேரிடையாகவே எடுத்துரைக்கிறார். அத்துடன் உள்ளத்தில் உண்மையான விருப்பமுடன் தினையளவு பரிசு வழங்கினாலும் அதை விருப்புடன் ஏற்பர். அதே சமயம் பரிசை நேரில் தந்து மகிழாத அரசனின் செயலைச் சுட்டிக்காட்டி, தன்மான உணர்ச்சியின் உறைவிடமாகப் புலவர்கள் விளங்கிய பாங்கையும் அப்பாடல் இனிது எடுத்தியம்புவது மகிழத்தக்கது.

அரசனைப் பாடிப் பரிசில் பெறக்கருதி வந்த புலவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கத் தவறியதோடு பரிசுதர அரசர்கள் தாமதம் செய்வதைப் புலவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. உடனே அந்நாட்டை விட்டு வெளியேறி விடுவர்.

அதியமான் நெடுமான் அஞ்சியைக் காணவந்த ஒüவையார், தனக்குப் பரிசில் நீட்டிக்கப்படும் நிலையில் பாடும் பாடல், புலவரின் தன்மான உணர்வு மேலிடும் பாடல்களுள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வதாகும். அறிவும் புகழும் உடையவர்கள் இறந்து விட்டனர் என்பதற்காக இவ்வுலகம் வறுமையுறாது என்பதை எடுத்துக்காட்டி, மழுவைக் கொண்டு காட்டுக்குள் செல்லும் தச்சன் வேண்டிய அளவு பொருளைப் பெற்றுத் திரும்புதல் திண்ணம். எனவே உன்நாட்டை விட்டுச் செல்கிறேன் என்னும் கருத்தை விளக்கும் அப்பாடல் வருமாறு,


""அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென

வறுந்தலை உலகமும் அன்றே அதனால்,

காவினம் கலனே சுருக்கினெம் கலப்பை,

மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்ú

எத்திசை செலினும் அத்திசைச் சோறே''

(புறம்-206,8-13)


கற்றவர்க்கு எங்கு சென்றாலும் சிறப்புகள் வந்து சேரும் என்பதை உணர்த்த விரும்பி, காட்டுப் பகுதியில் மரங்களுக்குக் குறைவில்லாததுபோல் நாட்டில் மன்னர்களுக்கும் குறைவில்லை என்பதை மனதில் கொண்டு அதியமான் நாட்டைவிட்டு ஒüவை புறப்படுவதை நோக்குகையில், சங்கப் புலவர்கள் தன்மான உணர்வுமிக்கவர்களாக விளங்கிய திறம் இனிது பெறப்படுகிறது.

ந‌ன்றி: தின‌ம‌ணி.

பேராசிரியப் பெருந்தகை மு.வ.

சு. அனந்தராமன்



மு.வரதராசனார்

"ஆசிரியர் வரதராசனாரை யான் நீண்டகாலமாக அறிவேன். அவரை யான் முதல் முதல் பார்த்த போது அவர் தம் மலர்ந்த விழியும், கூரிய மூக்கும், பரந்த நெற்றியும், நீண்ட முகமும், நிமிர்ந்த பிடரியும் என்னுள்ளத்தைக் கவர்ந்தன'' என்று தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனாரால் புகழ்ந்து பாராட்டப் பெற்ற பெருமைக்குரியவர்தான் டாக்டர்.மு.வரதராசனார்.

மு.வ. என்று அனைவராலும் அறியப்பட்ட மு.வரதராசனார், வட ஆர்க்காடு மாவட்டம் வேலம் என்னும் சிறிய கிராமத்தில் முனுசாமி முதலியார்-அம்மாக்கண்ணு தம்பதிக்கு 25-04-1912-ல் பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.

மு.வ. வின் இளமை வாழ்வும் தொடக்கக் கல்வியும் வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார்.

திரு.வி.க. ஆசிரியராகப் பணியாற்றிய "நவசக்தி' வார இதழைத் தவறாமல் படித்து வந்த மு.வ.வின் மனத்தில் தமிழ் ஆர்வம் ஆல் போல் தழைத்து வளர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை. பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928-ம் ஆண்டில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார்.

எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காக கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார்.

தமிழின் மீதிருந்த காதலால் 1931-ல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935-ல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காக திருப்பனந்தாள் மடம் ரூ. 1000 பரிசளித்தது.

1935-ல் மாமன் மகளை மணம்புரிந்த அவருக்கு, மூன்று மகன்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939-ல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.

தலைநகரப் பணி

1939-ல் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக் கல்லூரியின் "கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்' என்ற பொறுப்பை ஏற்றார்.

1944-ல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.

1948-ல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாக முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ.

1939-ல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்கு பணியாற்றினார். 1945-ல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே ஓராண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

பின்னர் 1971-ல் மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார்.

எழுத்துப் பற்று

""தமிழ்ப் பேராசிரியர் பதவியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டேன். துணைவேந்தர் பதவியிலிருந்தும் இன்னும் சில திங்களிலோ ஓர் ஆண்டிலோ விடை பெற்றுவிடுவேன். பிறகு ஆராய்ச்சிப் பேராசிரியராக இருக்க நேர்ந்தாலும் அதிலிருந்து சில நாள்களில் விடைபெற்றுவிடுவேன். நான் கடைசி வரையில் ஓய்வு பெற விரும்பாத பதவி ஒன்று உண்டு என்றால் அது எழுத்தாளர் பதவிதான். எழுத்து என் உயிருடன் கலந்து விட்ட ஒன்றாகும். என் கடைசி மூச்சு உள்ள வரையில் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பேன். எழுத முடியாத போது சொல்லிக் கொண்டாவது இருப்பேன்'' என்று மதுரைப் பல்கலைக்கழகத்தில் 1974}ல் ஆற்றிய சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார் மு.வ. என்று டாக்டர் இரா.மோகன் எழுதிய "அறிஞர் மு.வ.' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மு.வ. சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் செனட் உறுப்பினர் பதவி வகித்துள்ளார். கேரள, மைசூர் உஸ்மானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார்.

நாவல்கள், சிறு கதைகள், சிறுவர் நூல்கள், நாடகங்கள், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை போன்றவற்றை தமிழுக்குத் தந்துள்ளார். பெர்னாட்ஷா, திரு.வி.க., காந்தியடிகள், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக வடித்துள்ளார். இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டு பெருமை தேடிக்கொண்டுள்ளது.

""மு.வ.எழுதிய நூல்களில் கி.பி.2000 (சிந்தனைக் கதை) ஒரு தனிச் சிறப்புடையது. இதில் மு.வ.வின் இன்றைய நினைவும் நாளைய கனவும் உள்ளன. சிந்தனையும் கற்பனையும் இயைந்து இந்நூலை நடத்திச் செல்வதால் இதனைச் சிந்தனைக்கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதினங்களில் பண்டைத் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதில் மு.வ. தனித்து நின்றார். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய்த் திகழ்ந்தார். பழந்தமிழ் இலக்கியங்களைப் போற்றுவதிலும், தொன்றுதொட்டு வரும் தமிழ்ப் பண்பாடுகளை, நெறிகளைக் காப்பதிலும் அவர் தலைசிறந்து விளங்கினார். அதே சமயத்தில் இன்றைய உலகப் போக்கை ஒட்டி அறிவுக்கு ஒத்த முறையில் நம் மொழியை வளர்க்க வேண்டும், நம் பழக்க வழக்கங்களைச் சீர்திருத்திக்கொள்ள வேண்டும் என்பனவற்றிலும் அவர் முன்னோடியாக விளங்கினார்.

குறிப்பாக நாளை மலர்ந்து மணம் வீச இருக்கும் இன்றைய அரும்புகளாகிய இளைஞர்களை உருவாக்குவதில் மு.வ. கண்ணும் கருத்துமாக இருந்தார்'' என்று சாகித்ய அகாதெமி வெளியீடான மு.வ. என்ற நூலில் பொன் .செüரிராஜன் குறிப்பிட்டுள்ளார்.

""வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலையும் எதிர்படும் போது ஒதுக்கிச் செல்வதும் உண்டு; ஒதுங்கிச் செல்வதும் உண்டு. ஒதுங்கிச் செல்லும் வாழ்க்கை அச்சம் நிறைந்த வாழ்க்கை; ஒதுக்கிச் செல்லும் வாழ்க்கை அச்சமற்ற வாழ்க்கை. இந்த இரண்டும் பயனற்றவை. சிக்கலைத் தீர்த்து வெல்லும் வீரமே வேண்டும். அதுவே புத்துலகத்தின் திறவுகோல்'' என்று கி.பி.2000 என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் மு.வ.

சாகித்ய அகாதெமி விருது

மு.வ.வின் "அகல் விளக்கு' எனும் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. "கள்ளோ காவியமோ' என்ற நூலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது.

முதல் நாவல்

1944-ம் ஆண்டு மு.வ. எழுதிய "செந்தாமரை' நாவலை வெளியிட யாரும் முன்வராததால், அந்நாவலை அவரே வெளியிட்டார். ஏமாற்றத்தையும், புறக்கணிப்பையும் தாங்கி அந்நாவல் வெளிவந்ததாலும் மு.வ. ஆறுதலும், மகிழ்ச்சியும் அடைந்தார்.

இது குறித்து மு.வ. மறைவுக்குப் பின் "கலைமகள்' இதழில் எழுதிய அகிலன், ""அவருடைய முதல் நாவலை அக்காலத்தில் பதிப்பகங்கள் சில வெளியிட ஏற்றுக் கொள்ளவில்லையாம். கடைசியாக அதை வெளியிடத் துணிந்த பாரி நிலையம் செல்லப்பனிடமும் அன்றைய நிலையில் போதிய பொருள் வசதி இல்லை. பின்னர் மு.வ. தன் துணைவியார் ராதா அம்மையாரின் நகைகளை அடகு வைத்து தமது முதல் நாவலை வெளியிட்டாராம். பெர்னாட்ஷா எழுத்து வாழ்க்கைப் போராட்டம் பற்றித் தமிழில் ஒரு நூல் எழுதிய மு.வ. தாமே அப்படி ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளார் என்பது பலருக்குத் தெரியாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

செந்தாமரை வெற்றிக்குப் பின் 20 ஆண்டு காலம் உழைத்து ஆண்டுக்கு இவ்வளவு நூல்கள் என எழுதி பேரும் புகழும் பெற்றார். இந்த இருபது ஆண்டு காலத்தை மு.வ. என்ற எழுத்தாளரின் "பொற்காலம்' என்றே சொல்லலாம்.

மு.வ.வைப் பற்றி ஆர்.மோகன் முதன் முதலில் "மு.வ.வின் நாவல்கள்' என்ற நூலை 1972}ல் எழுதியுள்ளார். மேலும் இரா.மோகன் மு.வ.வைப் பற்றி 5 நூல்கள் எழுதியுள்ளார்.

1972-ம் ஆண்டு மு.வ.வுக்கு அறுபது ஆண்டு நிரம்பப் பெற்றபோது மணிவிழாக் கொண்டாடச் சிலர் முன்வந்தனர். ""யான், எனது என்னும் செருக்குக்கு இடம் தருகின்ற தனிமனிதர் பாராட்டு விழாக்கள் குறைய வேண்டும். மனித இனம் கடவுளின் குடும்பம் என்ற நல்லுணர்வை வளர்க்கும் சமுதாய விழாக்கள் பெருக வேண்டும். பாராட்டு விழாக்களுக்கு உரியவர்களும் தமக்காக விழா நடப்பது குறித்து உள்ளம் ஒடுங்க வேண்டும்'' என்று எழுதிய மு.வ. தம் மணிவிழாக் கொண்டாட்டத்தை மறுத்துவிட்டார்.

பெரியோருக்கு மரியாதை

1940-ல் எழுதிய "படியாதவர் படும் பாடு' என்னும் நூலின் கடைசிக் கட்டுரையில், ""நமக்குமுன் வாழ்ந்த பெரியோர்களின் வாழ்வை நாம் அறிதல் வேண்டும். அவர்கள் வாழ்வு நமக்கு வழிகாட்டியாகும். அவர்களைக் காண்பதும் கேட்பதும் அவர்களோடு பழகுவதும் இப்போது கூடுமோ? ஒரு வகையால் கூடும். அவர்கள் நூல்களின் வடிவாக விளங்குகிறார்கள். அந்நூல்களைக் கற்றலும் கேட்டலும் வேண்டும். அப்பேறு எவர்க்கு உண்டு? கற்றவர்க்கே உண்டு; மற்றவர்க்கு இல்லை'' என்று எழுதியுள்ளார்.

மு.வ.வுக்கு உடல் தளர்ச்சி மிகுந்துகொண்டே சென்று 1974 அக்டோபர் 10-ம் தேதி இறையடி சேர்ந்தார்.

நம் காலத்தில் நமக்காக வாழ்ந்த பெரியார் மு.வ. வின் வாழ்வு நமக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகும்.

ந‌ன்றி: தின‌ம‌ணி

சங்க இலக்கியத்தில் மனித நேயம்

மனிதன் சக மனிதனை நேசிக்கிற-சக மனிதன் துன்பம் போக்கி வாழ்கின்ற மனித நேயத்துக்கும் அப்பால், உலகத்தில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுகின்ற-எல்லா உயிர்களின் துன்பம் போக்குகின்ற உன்னதமான வாழ்க்கை நெறியைச் சங்ககாலம் காட்டுகிறது.

பெரிய வள்ளல் என்று இன்றும் போற்றப்படுகின்ற பாரிவள்ளல் மனிதர்களிடம் மட்டுமா அன்பு காட்டினான்? அவனுடைய அன்பு, வாடிய முல்லைக் கொடியிடம் கூட சென்றதே! படரக் கொடியின்றி வாடிய முல்லைக் கொடி படர, தன் தேரையே நிறுத்திவிட்டு நடந்து வந்த பாரியின் மனம், சகல உயிர்களையும் நேசித்த உணர்வு மிக்கதல்லவா! வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் முன்னோடி பாரிதான்!

பாரியைப் போலவே பெரிய வள்ளலாக, சங்க காலத்தில் வாழ்ந்தவன் பேகன். அவனும் புலவர்களையும் இரவலர்களையும் நேசித்ததோடு, அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டினான். மனிதனின் வாட்டத்ததைப் போக்கிய மன்னன் பேகன், குளிரால் வாடிய மயிலுக்கு உயர்ந்த போர்வையைப் போர்த்தினான். இவனும், எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி இரங்கிய வடலூர் வள்ளலாரின் முன்னோடியே!

குறுங்குடி மருதனார் என்ற சங்ககாலப் புலவர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்று எண்ணத்தக்கது. தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வாடும் தலைவியை நோக்கி, "கார்காலம் வந்துவிட்டது; தலைவன் விரைவில் வந்து விடுவான்' என்று, பருவ காலத்தைச் சுட்டிக் காட்டி ஆற்றுவிக்கும் தோழி, தலைவனின் நல்ல மனதைக் கூறுவதில் சங்ககால மனித உணர்வைக் காணலாம்.


""பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

தாதுண் பறவை பேதுறல் அஞ்சி

மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்

உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்''

(அகநா-4)


பூத்த சோலையில் தம் துணையோடு தேனில் திளைத்து மகிழும் வண்டினங்கள், மணியொலி கேட்டு பயந்து, கலைந்து சென்று விடுமோ என்று கருணையோடு எண்ணி, தன் தேர் மணிகளின் நாவை ஒலிக்காத வண்ணம் கட்டி, தேரைச் செலுத்துபவனாம் தலைவன். பலநாள் பிரிந்து கிடந்து, வாடும் தலைவியைக் காண விரைந்து வரும் வேளையிலும், வண்டினங்கள் மகிழ்வைச் சிதைத்துவிடக் கூடாதே என்று நினைத்த உள்ளம் சங்ககாலச் சமுதாயப் பண்பைப் பிரதிபலிப்பதாகும். எவ்வுயிர்க்கும் தன்னால் துன்பம் நேர்ந்துவிடக் கூடாது என்பதையும், எவ்வுயிரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்பதையும் குறுங்குடி மருதனார் இக் காட்சியின் மூலம் உணர்த்துகிறார்.

சீத்தலைச் சாத்தனார் பாடிய அகப்பாடல் ஒன்றும் நினைக்கத்தத்தது. காதலியைப் பிரிந்து சென்ற தலைவன், தன் பணி முடித்துக் குதிரை பூட்டிய தேரில் திரும்பும் போது, தன் பாகனுக்கு உரைத்ததில் காணப்படும் அன்புணர்ச்சி கற்றோர் நினைவை விட்டு அகலாதது.


""வாஅப் பாணி வயங்குதொழில் கலிமாத்

தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க

இடமறந் தேமதி வலவ குவிமுகை

வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த

ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு

கணைக்கால் அம்பிணைக் காமர் புணைநிலை

கடுமான் தேர்ஒலி கேட்பின்

நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே''

(அகநா-134)


காதலியை விரைவில் காண வேண்டும் என்று வரும் வழியில், ஆண்மானும் பெண்மானுமாய்க் கூடி மகிழ்ந்திருப்பதைக் கண்ட தலைவன், தேரொலி கேட்டு அவைகள் கலைந்துவிடும் என்று எண்ணி, குதிரையைச் சாட்டையால் அடித்து ஓட்டாது மெல்ல நடத்திச் செல்க என்று பாகனுக்கு உரைக்கிறானாம். மனித நேயத்தையும் தாண்டி அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டும் தலைவனின் உயர்ந்த நெறியைச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுகிறது.

ந‌ன்றி: தின‌ம‌ணி

Wednesday, October 1, 2008

வ‌லுபெறும் ஈழ‌த்த‌மிழ‌ர் ஆத‌ர‌வுப் போராட்டம்!

வ‌லுபெறும் ஈழ‌த்த‌மிழ‌ர் ஆத‌ர‌வுப் போராட்டம்!

ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்-திரளும் புதுக் கூட்டணி!
http://thatstamil.oneindia.in/news/2008/09/30/tn-all-parties-except-dmk-cong-to-attend-cpi-fast-protest.html

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்‌சினை : தி.மு.க. பொது‌க்கூ‌ட்ட‌ம்!

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0809/30/1080930074_1.htm


ஈழ‌த் த‌‌மிழ‌ர்களு‌க்காக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் உ‌ண்ணா‌விரத‌ம்: ராமதாஸ்!
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0809/30/1080930063_1.htm


சி‌றில‌ங்காவு‌க்கு ராணுவ உதவி செ‌ய்துவரு‌ம் ம‌த்‌திய அரசை கண்டித்து 10ஆ‌ம் தே‌தி ம‌றிய‌ல்: வைகோ!

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0809/30/1080930043_1.htm

இல‌ங்கை‌த் த‌மிழர்களு‌க்காகவே ஆ‌ட்‌சியை இழ‌ந்தோ‌ம் : கருணாநிதி!
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0809/30/1080930050_1.htm


இதில் தி.மு.க‌ ம‌ற்றும் அ.தி.மு.க‌ வின் நிலைப்பாடு க‌ட‌ந்தெடுத்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ம் தான்....
க‌லைஞ‌ர் இவ்வ‌ள‌வு நாள் வாய்திற‌க்காம‌ல் இருந்துவிட்டு இப்போ எல்லா க‌ட்சியும் போராட்ட‌ம் அறிவித்த‌தும் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா அறிக்கை விடுறாரு.....இது க‌டைந்தெடுத்த‌ க‌ள‌வாலித்த‌ன‌ம்தானே....



எல்லோருமே வ‌ரும் தேர்த‌லை ம‌ன‌தில் வைத்துதான் போராட்ட‌தை முன்னெடுக்கின்றார்க‌ள் என்ப‌துதான் உண்மை.....

எது எப்ப‌டியோ எல்லொரும் ஒன்றாக‌ குர‌ல் கொடுத்து மிக‌ நீண்ட‌ காலமாக‌ சொல்லொன்னா துய‌ர‌ங்க‌ளுக்கு ஆட்ப்ப‌ட்டு கிட‌க்கும் ந‌ம் ஈழ‌த்த‌மிழ‌ர் வாழ்வில் ஒளிபிற‌ந்து துன்ப‌ம் நீங்கி வாழ‌வேண்டும் என்ப‌துதான் எம‌து அவா.