கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
இலங்கைத் தீவின் மொத்த நிலப்பரப்பு 65 ஆயிரத்து 525 சதுரகிலோ மீட்டர். இதில் 29 சதவீதம் தமிழ் மரபுவழித் தாயகமாகும். இன்றைக்கு சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்குப் பகுதியில் 7 ஆயிரம் சதுர கிலோமீட்டரும், வடக்குப் பகுதியில் 5 ஆயிரம் சதுர கிலோ மீட்டரும் பரப்பளவு உள்ள தமிழர்களின் எதிர்ப்பையும் பொருள்படுத்தாமல் சிங்களர் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
பண்டித நேரு, பெருந்தலைவர் காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் அனைவரும் 1950 - 60-களில் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களைக் குறித்து சிலாகித்துள்ளனர். மூதறிஞர் ராஜாஜி தொடக்கத்தில் இலங்கைத் தமிழர்கள் பூர்வீகத் தமிழர்கள் இல்லை என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு பூர்வீக மைந்தர்கள் என்று திருத்திக் கொண்டேன் என்பதை 1963-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி "மெயில்' ஏட்டில் குறிப்பிட்டுள்ளார்.
சாஸ்திரி, இந்திரா காந்தி காலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தங்களுக்குப் பிறகு இலங்கை அரசுக்கு நாம் எதைச் சொன்னாலும் இந்தியா கேட்கும் என்ற தைரியம் ஏற்பட்டது. அதனால் ஈழத் தமிழர்களை இலங்கையின் பூர்வீக மண்ணின் மைந்தர்கள் என்று கருதாத நிலைமை ஏற்பட்டதால் தான் பிரச்னைகள் சிக்கலுக்கு மேல் சிக்கலாக்கியது.
1948-ல் இலங்கை விடுதலை பெற்றது முதலே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கையின் பூர்வகுடியினராக விளங்குகின்ற தமிழ்மக்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகின்றனர். அதனால்தான் தந்தை செல்வா இதை எதிர்த்து 1949-ல் தமிழ் அரசு கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
1956-ல் திரிகோணமலையில் நடைபெற்ற தமிழ் அரசு கட்சி மாநாட்டில் தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம உரிமை, தமிழர் அனைவருக்கும் குடியுரிமை, தமிழர் பகுதிகளில் சிங்களவரைக் குடியமர்த்துவதைத் தடுப்பது போன்ற கோரிக்கைகள் தீர்மானிக்கப்பட்டு மறியல் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக 1957-ல் செல்வாவும், பண்டார நாயகாவும் இது குறித்து ஓர் ஒப்பந்தத்தைச் செய்த பின்பும் சிங்கள அரசு அதைக் கிடப்பில் போட்டது. 1958-ல் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டு தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டனர்.
1958-ல் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் தமிழில் எழுத முடியாமல் தவித்தனர். 1960-ல் நீதிமன்றம் சிங்களத்தை மட்டும் பயன்படுத்தியது. 1965-ல் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சிக்குப் பெரும்பான்மை இடம் கிடைக்காமல், செல்வா தலைமையில் தமிழ் அரசு கட்சியின் ஆதரவோடு டட்லி சேனநாயகா பிரதமரான பிறகும்கூட தமிழர்களுக்கு மாவட்ட மன்றங்கள், தமிழ் நிர்வாக மொழி என்று அறிவிக்கப்பட்ட உறுதிமொழி குப்பையில் போடப்பட்டது.
1970-ல் சிங்கள மாணவர்களைவிட தமிழ் மாணவர்கள் உயர்கல்விக்குச் சேர வேண்டும் என்றால் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது இலங்கை அரசு. கொதித்தெழுந்தார்கள் தமிழ் மக்கள். அதுதான் தமிழ்ச் சமுதாயம் வெகுண்டெழுந்து போராட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. 1972-ம் ஆண்டு வரை தமிழர்கள் அதிகாரங்களைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பையே வலியுறுத்தினர். இந் நிலையில் தமிழர்களைக் கலந்தாலோசிக்காமல் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, தமிழர்களுக்கு விரோதமாக ஒற்றை ஆட்சி முறை நிறுவப்பட்டது. 24 ஆண்டுகள் இவ்வாறு தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளான ஈழத் தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் 1976-ல் தமிழ் அரசுக் கட்சியும், மலையகத் தமிழர்களும் சேர்ந்து வட்டுக்கோட்டையில் தமிழர்களுக்குத் தனி நாடு கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி - அதன்பின் செல்வா மறைவுக்குப் பின்பு நடந்த தேர்தலில், இக்கோரிக்கையை முன்வைத்து 19 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளைத் தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது. அப்போதுதான் அங்குள்ள தமிழ் மக்கள் முதன்முதலாகத் தனிநாடு கோரிக்கைக்குத் தேர்தல் மூலம் ஆதரவு தெரிவித்தனர்.
1983-ல் நடந்த கொடுமையான இனப்படுகொலையைக் கொடிய அரசு பயங்கரவாதம் என உலகமே கண்டித்து கண்ணீர் வடித்தது. இந்திரா காந்தி காலத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கின்ற ஓர் அணுகுமுறையை, அதேநேரத்தில் இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களையும் பாதுகாத்துக் கொள்கின்ற தொலைநோக்குச் சிந்தனை கொண்ட ஓர் அணுகுமுறையை அவர் வகுத்தார் என்பதை மறுக்க இயலாது. இந்திரா அம்மையாரின் மறைவுக்குப் பிறகுதான், இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் அணுகுமுறை முற்றிலுமாக மாறத் தொடங்கியது எனலாம். ஈழத் தமிழர் பிரச்னையில் நடந்த கசப்பான சம்பவங்களைக் கொண்டே பிரச்னையைப் புறந்தள்ள முடியாது. கடந்த காலங்களில் ஏற்பட்ட கவலைகள், துக்கங்கள் இருந்தாலும் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் பஞ்சாப் பிரச்னையில் இந்திய அரசு தலையிட்டு தீர்வை ஏற்பட அக்கறை செலுத்தியது போலவே ஈழப் பிரச்னையிலும் கடந்தகால துன்பவியல் சூழலை மட்டும் மனதில் கொள்ளாமல் ஈழத் தமிழரைப் பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியாவின் பாதுகாப்புப் பிரச்னையும் அடங்கியுள்ளது. 1970-களில் இந்திய மகா சமுத்திரத்தில் அமெரிக்க ஆயுத தளம் டீகோகரசியா பிரச்னையில் இந்தியாவும், சோவியத் யூனியனும் கண்டனக் குரல் எழுப்பியபோது இலங்கை அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்தது. ஒரு காலத்தில் திரிகோணமலை துறைமுகத்தை மேற்கத்திய ஆதிக்க சக்திகள் இந்தியாவை மனத்தில் கொண்டு அப்பகுதியைக் குத்தகைக்குக் கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டன.
அப்போதெல்லாம் இந்திய பாதுகாப்புக்குப் பிரச்னை ஏற்படும் என்று ஈழத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியதை நாம் மறுக்க முடியாது.
ஈழத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் இந்தியாவையும் நேசிக்கின்றனர். கடந்த காலங்களில் இந்தியாவோடு சீனா, பாகிஸ்தான் போர் தொடுத்தபோது நிதி அளித்தது மட்டுமல்லாமல் சகோதர பாசத்தோடு இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர் என்பது வரலாற்றுச் செய்திகள். அன்றைக்கு ஈழத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட செல்வநாயகம் சீனாவையும், பாகிஸ்தானையும் கடுமையாகக் கண்டித்து நாடாளுமன்றத்தில் பேசினார். இந்தியாவுக்கு நிதி சேர்த்து அங்குள்ள தமிழர்கள் நேரு பிரதமராக இருந்தபோது அனுப்பினர். ஆனால், சிங்கள அரசோ சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆதரவாக மௌனம் சாதித்தது.
1987-ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு ராஜீவ் காந்தி இலங்கைக்குச் சென்றபோது, இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த ரோகனா விஜய் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியும், 1990-ம் ஆண்டு அக்கொடியவனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட செய்தி, இலங்கை ஒருமைப்பாட்டை கவலைகொள்ளும் இந்திய அரசுக்குத் தெரியுமா?
இலங்கைக்கான பாகிஸ்தானின் தூதராகச் செயல்படும் பசீது வாலி முகமது முயற்சியால் பாகிஸ்தானிலிருந்து இரண்டு கப்பல் ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. அக்கப்பல் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ல் இலங்கைத் துறைமுகத்திற்கு வந்தது. இந்த பசீது வாலி வேறு யாருமில்லை; இந்தியாவில் குழப்பத்தையும், தீவிரவாதத்தையும் ஊக்குவித்த ஐ.எஸ்.ஐ.-இன் முன்னாள் தலைவர் என்பது மத்திய அரசுக்குத் தெரியுமா? இன்றைக்கு இந்த பசீது வாலி இலங்கை அரசுக்கு உண்மைத் தோழனாக - உற்ற நண்பராக இருக்கிறார். இது மத்திய அரசுக்குத் தெரியுமா?
இலங்கையின் ஒருமைப்பாடு என்று சொல்லிக்கொண்டே இந்தியா இருக்காமல் எதார்த்த நிலை அறிந்து கடமையாற்ற வேண்டும். இலங்கைக்கு வழங்கிய ராடார்கள் திரும்பப் பெற வேண்டும்; அங்கு அனுப்பப்பட்ட ராணுவப் பிரிவினரைத் திரும்ப அழைக்க வேண்டும். இந்தியா கடன் கொடுப்பதாகச் சொன்ன உத்தரவாதத்தை ரத்து செய்ய வேண்டும். இந்தியக் கடற்படையும் இலங்கைக் கடற்படையும் ஏற்றுக்கொண்ட தகவல் பரிமாற்றத்தை நிறுத்த வேண்டும். இந்தியாவில் ஒருபொழுதும் இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சி கொடுக்கக் கூடாது. ஐ.நா. மன்றத்தின் அலுவலகத்தைக் கொழும்பில் தொடங்குவதற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர் பகுதியில் உண்மை நிலவரங்களை அறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை இந்தியா அனுப்ப வேண்டும். சிங்களத் தலைவர்கள் - இந்தியத் தலைவர்களை அடிக்கடி சந்திப்பதைப் போன்று ஈழத் தமிழர் தலைவர்களும் இந்திய அரசாங்கத்தையும், இந்திய அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து தங்களுடைய பிரச்னைகளை விவாதிக்க வாய்ப்புத் தர வேண்டும்.
பாலஸ்தீனத்திற்கும், வங்க தேசத்திற்கும் கிழக்குத் தைமூருக்கும், ருவாண்டா பட்டினிப் பிரச்னையிலும் ஈரான், இராக், நேபாளம் போன்ற சர்வதேச பிரச்னைகளில் கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகளைப் போன்று அருகில் உள்ள இலங்கையின் பிரச்னையைத் தீர்க்கவும் இந்தியா முன்வர வேண்டும் என்பதுதான் தமிழினத்தின்மீது அக்கறை உள்ளவர்களின் கோரிக்கை, வேண்டுகோள் எல்லாமே!
நன்றி: தினமணி.
No comments:
Post a Comment